மேல்மலையனுார் கோவில் உண்டியலில் கைவரிசை

- நமது நிருபர் -

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், உண்டியல் காசு திருடப்படும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உண்டியலில், காணிக்கை பணத்தை, சிலர் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. இது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் கூறியதாவது:

இக்கோவில் மணியக்காரர் அண்ணாமலை, அறங்காவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில், அவர்களின் உறவினர்கள் துண்டை விரித்து உண்டியல் பணத்தை அள்ளி செல்வது கேமரா காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் வந்த போதிலும், சம்பந்தப்பட்டோர் மீது, அறநிலையத்துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனை.

கடந்த வாரம் கோவில் பாதுகாப்புக்காக, 15 மெய்க்காவலர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு ந டந்துள்ளது. அறங்காவலர் குழு தலைவரின் சொந்தக்காரர்களுக்கு இந்த பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும், அதிகாரிகள் விசாரிக்கவில்லை. அங்காளம்மன் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் குலதெய்வம். அவரும் இந்த முறைகேடுகள் குறித்தும் கண்டுகொள்வதில்லை.

பக்தர்கள் மனமுருகி செலுத்தும் காணிக்கையை சேகரிக்கும் உண்டியல், தனி நபர்களால் வைக்கப்பட்டது, பெரும் மோசடி. ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement