போலீஸ் கமிஷனர் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்க அரசிடம் அறிக்கை

பெங்களூரு: ஜி.பி.ஏ., போல, பெங்களூரு நகரில் ஐந்து போலீஸ் கமிஷனரகத்தை அமைத்து, 6,633 புதிய பணியிடங்களை உருவாக்கி, தலைமை கமிஷனரை நியமிக்கும் திட்டம் தொடர்பாக, அரசிடம், மாநில போலீஸ் துறை அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

அரசிடம், போலீஸ் துறை சமர்ப்பித்துள்ள பரிந்துரையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பெங்களூரு நகரில் மக்கள் தொகை, 1.5 கோடிக்கும் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல், இணையவழி குற்றங்கள் அதிகரிக்கின்றன. அத்துடன் பெங்களூரு நகரின் எல்லை, 712 சதுர கி.மீட்டராக விரிவடைந்து உள்ளது. இதனால், சட்டம் - ஒழுங்கை மேலும் நிலைநாட்ட, கர்நாடக போலீஸ் துறை திட்டம் வகுத்துள்ளது.

ஐந்து கமிஷனரகம்

இதன்படி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் போன்று, பெங்களூரு நகர கமிஷனரகத்தை, மத்திய, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு கமிஷனரகங்களாக பிரிக்க வேண்டும். இந்த ஐந்து கமிஷனரகத்துக்கு, தலைமை போலீஸ் கமிஷனராக ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெங்களூரு கிழக்கு பிரிவின் கீழ், ஒயிட்பீல்டு, கே.ஆர்.,புரம், மஹாதேவபுரா, கிருஷ்ணராஜபுரம் பகுதிகள் இருக்கும். இதற்கு 2,734 பணியிடங்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

மேற்கு பிரிவில், விஜயநகர், பீன்யா, கெங்கேரி, மேற்கு மண்டல தொழில் துறை பகுதிகள் இருக்கும். இதற்கு, 1,235 பணியிடங்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

தெற்கு பிரிவில், ஜெயநகர், எலக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா மற்றும் தெற்கு பகுதிகள்; இதற்கு, 1,043 பணியிடங்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும். வடக்கின் கீழ், எலஹங்கா, தேவனஹள்ளி, விமான நிலையம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்; இதற்கு 944 பணியிடங்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

மத்திய கமிஷனரகத்தின் கீழ், சி.பி.டி,. எனும் மத்திய வணிக மாவட்டம், விதான் சவுதா, உயர் நீதிமன்றம் மற்றும் முக்கிய வணிக பகுதிகள் இடம் பெறும். இதற்கு 677 பணியிடங்கள் என மொத்தம் 6,633 புதிய பதவிகளை உருவாக்க வேண்டும்.

இந்த ஐந்து மண்டலமும் ஐ.ஜி., அல்லது டி.ஐ.ஜி., அந்தஸ்துள்ள உள்ள அதிகாரிகளின் மேற்பார்வையில் இருக்கும். இவர்கள் அனைவரும், 'தலைமை போலீஸ் கமிஷனரின்' கீழ் பணியாற்றுவர்.

போக்குவரத்து நெருக்கடி

தனித்தனி கமிஷனரகம் அமைப்பதால், குற்ற வழக்கு விசாரணையும், தீர்ப்பும் விரைவாக கிடைக்கும். அதுபோன்று போக்குவரத்து நெருக்கடியையும் தீர்ப்பது சுலபமாகும்.

இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு பணியாளர் சம்பளம் உட்பட தொடர் செலவினங்களுக்கு, 3,687.12 கோடி ரூபாயும்; கண்காணிப்ப கேமரா, வாகனங்கள், தொழில்நுட்பம், உள்கட்டமைப்புக்கு 3,961.60 கோடி ரூபாய் என, மொத்தம் 7,648.72 கோடி ரூபாய் தேவைப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், பெங்களூரு நகரின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

Advertisement