காவல்துறையால் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள், குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்கள், 35 பைக்குகள், கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 15 பைக்குகள், காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 10 பைக்குகள் என மொத்தம் 62 வாகனங்கள் நேற்று பொதுஏலம் விடப்பட்டது. முன்னதாக, ஏலம் விடப்படும் வாகனங்கள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

வாகனத்தை ஏலம் எடுப்பதற்காக வந்தவர்கள் முன்தொகையை செலுத்தி பங்கேற்றனர். எஸ்.பி., ஷஹ்னாஸ் முன்னிலையில் பொது ஏலம் தொடங்கியது. போலீசார் ஒவ்வொரு வாகனமாக கொண்டு வந்து நிறுத்தி, ஆரம்ப விலையை தெரிவித்தனர். உடன், ஏலதாரர்கள் தாங்கள் விரும்பிய வாகனங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக விலையை உயர்த்தி தெரிவித்தனர். இறுதியில், அதிக விலை கோரியவர்களுக்கு பைக் வழங்கப்பட்டது.

Advertisement