பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்

உளுந்துார்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில், சென்னை நபர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் சிராஜூதீன், 44; டிரைவர். இவர், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ஷிப்ட் டிசையர் காரை ஒட்டி சென்றார். காரில் சென்னை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நாராயணன், 53; அவரது மனைவி மீனாட்சி, 46; ஆகியோர் உடன் சென்றனர். நேற்று மதியம் 3:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பாலி அருகே கார் சென்றபோது, பைக் மீது மோதியதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் சிராஜூதீன், நாராயணன், அவரது மனைவி மீனாட்சி, பைக் ஓட்டி சென்ற உளுந்துார்பேட்டை அருகே மட்டிகை கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் விஜய், 28; ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாராயணன் உயிரிழந்தார். விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement