விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திடீரென பூச்சி தாக்குதலில், 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் கதிர்வரும் பருவத்தில் காய்ந்து வீணாகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம், மரகதபுரம், திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த நவரை பருவத்தில் பயிரிட்ட நெற்பயிர்களில் திடீர் பூச்சி தாக்குதலால், 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள், கதிர் வரும் பருவத்தோடு காய்ந்து வீணாகி உள்ளன.
இது குறித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
விழுப்புரம் சுற்று வட்டார கிராமங்களில், வழக்கம் போல் நவரை பருவத்தில், சித்திரை நெல் சாகுபடிக்கு கடந்த ஏப், மே மாதங்களில் நாற்று விட்டு பயிரிடும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.
4 மாத பயிரான சித்திரை சாகுபடியாக டி.கே.9 சிவப்பு கார் நெல், ஏ.டி.டி. 37 ரக நெல் பயிரிடப்பட்டது.
நடவு செய்த உடன் ஆரம்ப காலத்தில் பயிர் செழித்து வளர்ந்தது. கடந்த மாதம் கதிர் வரும் பருவத்தில், திடீர் பூச்சி தாக்குதலால் பயிர்கள் வாடி வதங்கிப்போனது. சில வயல்களில் கதிர் வராமல் வதங்கிப்போனது.
கண்டம்பாக்கம், மரகதபுரம், திருப்பச்சாவடிமேடு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ரகுபதி, மணிகண்டன், ராமகிருஷ்ணன், சக்திவேல், அசோக் உள்ளிட்ட விவசாயிகள் பயிரிட்ட 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள், இப்படி பூச்சி தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு ஏற்பட்ட கடும் வெயில் தாக்கம் காரணமாகவும், செம்பேன் எனப்படும் சார் உறிஞ்சும் பூச்சி தாக்குதல் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த பூச்சி தாக்குதல் ஏற்பட்ட உடனே, பூச்சி மருந்துகள் மற்றும் டானிக் தெளித்து கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நோய் தாக்கத்தால் பயிர்கள் பெரும்பாலும் 75 சதவீதம் காய்ந்து வீணாகிவிட்டன.
இந்த நெற்பயிர்களுக்காக ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் வரை (உழவு, விதை, நடவு, உரத்திற்கு) செலவிடப்பட்டதோடு, பூச்சி மருந்துக்கும் கூடுதலாக செலவிட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏக்கருக்கு, 30 மூட்டை நெல் விளையும் இடத்தில், 5 மூட்டைகள் கூட தேறாது. ஏரி பாசனம், மோட்டார் பாசனம் கொண்ட இந்த பகுதியில் எப்போதும் இந்த பாதிப்புகள் ஏற்பட்டதில்லை. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இது குறித்து, வேளாண் துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பூச்சி தாக்குதலா, வெயில் தாக்கம் காரணமா என்ற விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இதனால், அதிகாரிகள் இந்த பயிர்களை பார்வையிட்டு, பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்