அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கோலாகாட், சிவசாகர், பிஸ்வநாத், சாரைடியோ, காமரூப், ஜோர்காத், தேமஜி, நாகான் ஆகிய எட்டு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில், 42,487 ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 2.12 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். அரசு சார்பில் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில், 12,356 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், பொதுமக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை. மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 95ஐ எட்டியுள்ளது.

நுமலிகர்ரில் உள்ள தன்ஸ்ரீ ஆற்றில் வெள்ளம் அபாய அளவை கடந்து பாய்ந்தோடி வருகிறது. இதனால், கோல்ஹாட், லக்கிம்பூர், சிவசாகர், பிஷ்வாந்த், கம்ரூப் உள்பட 14 மாவட்ட மக்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement