தினமலர் சொன்னது; அரசு செய்தது; செயற்கையிழை ஆடை உற்பத்தி மேம்பட பின்னலாடை நகரில் தொழில்நுட்ப மையம்

3


நமது நிருபர்




தமிழக பட்ஜெட்டில் தொழில், கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூருக்கு ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது பின்னலாடைத் துறைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக மாறியுள்ளது.

தினமலர் நாளிதழ் மூலம் தொழில்துறையினர் வெளிப்படுத்திய கோரிக்கையின் பலனாக கிடைத்த இந்த அறிவிப்பு, தொழில்துறையினரிடம் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று தாக்கல் செய்தார்; பட்ஜெட் குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கருத்துக்கள்...

பின்னலாடை துறைக்கு பெரிய அங்கீகாரம்

சண்முகசுந்தரம், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்(சைமா):
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு 'சைமா' நன்றி தெரிவிக்கிறது. கடந்த ஜூலை 21-ம் தேதி, திருப்பூரில் நைலான் உள்ளிட்ட செயற்கை இழை மற்றும் நவீன ஆடை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்ற 'சைமா'வின் கோரிக்கையை 'தினமலர்' நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் வேண்டுகோளின்படி, 'சைமா' சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், 'திருப்பூர் ஜவுளி தொழில்நுட்ப மையம்' அமைக்க 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

மையம் செயல்பாட்டுக்கு வந்தால், பசுமை ஆடை உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள், செயற்கை இழை, தொழில்நுட்ப ஜவுளி, புதிய தயாரிப்புகள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நடவடிக்கைகளில் திருப்பூர் முன்னணி மையமாக உருவெடுக்கும். 'வெற்றி தொழில் முனைவோர் திட்டம்', ஏ.ஐ. அடிப்படையிலான தொழிற்பயிற்சிகள், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள், தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனுக்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஆகியவை தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கும் பயனளிக்கும்.

கைத்தறி, துணி நுால் மற்றும் கதர் துறைக்கு 1,678 கோடி ரூபாய், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு 2,142 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது தொழில்நுட்ப மேம்பாடு, விரிவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும். திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் உலகளாவிய போட்டித்திறனை உயர்த்தும்.

தொழில்நுட்ப ஜவுளி முன்னேற வாய்ப்பு

காந்திராஜன், தலைவர், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்: கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறைக்கு 1,678 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது வளர்ச்சிக்கு உதவும். திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதால், பின்னலாடை நிறுவனங்கள் தொழில்நுட்ப ஜவுளித் துறையில் முன்னேற வாய்ப்பு உருவாகும். நகர்ப்புற வளர்ச்சி, நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடும் வரவேற்கத்தக்கது. அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித்துறை வளர்ச்சிக்கு பட்ஜெட் உறுதுணை

விவேகானந்தன், தலைவர், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கம்(சிம்கா): திருப்பூரில் ஆட்டோமேஷன், டிஜிட்டல் உற்பத்தி மற்றும் நீடித்த நிலையான ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதிநவீன ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச தரத்திலான ஆடை வடிவமைப்பு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்க 60 கோடி ரூபாய், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு தனி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது.

தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு 4,282 கோடி ரூபாய் ஒதுக்கீடு, தொழில்நுட்ப ஜவுளி மற்றும் தறி நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம், கோவையில் 'சிட்ரா'வில் விளையாட்டு ஆடைகளுக்கான மேம்பட்ட ஆய்வகம், தொழிலாளர்களுக்கான நவீன தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள், ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

புதிய இயந்திரம் வாங்க மானியம் அவசியம்


ஸ்ரீகாந்த், தலைவர், திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா): குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்காக 2,142 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திருப்பூரில் செயல்படும் பெரும்பாலான பிரின்டிங் நிறுவனங்களும் குறு, சிறு தொழில் நிறுவனங்களாக இருப்பதால், இந்த நிதி ஒதுக்கீடு தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பிரின்டிங் துறையின் தொடர்ச்சியான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு புதிய இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கினால் மேலும் பயன் கிடைக்கும்.

பின்னலாடைத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அவசியமான நிலையில், திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வரும் வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே, எந்தெந்த துறைகள் எவ்வாறு பயனடையும் என்பது முழுமையாக தெரியவரும்.

மின் கட்டண சலுகை இடம் பெற்றிருக்கலாம்


கோவிந்தசாமி, தலைவர், திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்: 'வெற்றி' திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான நிதி, புதிய தொழில் கொள்கை அறிவிப்பு ஆகியவை வரவேற்புக்குரியவை. திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைத்து, பசுமைசார் ஆடை உற்பத்திக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது தொழில் வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

இந்தியாவிலேயே குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், இந்தத் துறைக்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கலாம். சிறு, குறு தொழில்களுக்கான மின்கட்டண சலுகை, வட்டி மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

Advertisement