கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்  

விழுப்புரம்: கரும்பு டிராக்டர் கவிழ்ந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே காணை அடுத்த மல்லிகைப்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயியின் கரும்பு தோட்டத்திலிருந்து, நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல்,35; தனது டிராக்டருடன் சிறிய பெட்டியில் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு, முண்டியம் பாக்கம் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டார்.

இந்த கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் நேற்று மாலை 4:30 மணிக்கு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கியது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், லேசான காயங்களுடன் டிரைவர் சக்திவேல் உயிர் தப்பினார். கரும்பு லோடு பெட்டியுடன் சாலையில் கவிழ்ந்ததால் சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து, உடனே போக்குவரத்தை சீர்படுத்தி எதிர் சாலையில் திருப்பி அனுப்பினர். இதனால், 20 நிமிடம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கவிழ்ந்த டிராக்டர் பெட்டியை ஓரங்கட்டி, மாற்று வாகனத்தில் கரும்பை அனுப்பி வைத்தனர்.

Advertisement