கோவிலில் திருட முயன்ற களவாணிகள் சிக்கினர்

தாராபுரம்,:தாராபுரத்தை அடுத்த குண்டடம் நவனாரியில், சீலைக்காரி அம்மன் கோவிலில், இரு ஆசாமிகள் கோவில் வெண்கல மணியை, இரும்பு கட்டர் மூலம் நேற்று மதியம் அறுத்துக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்து ஒருவர் கேள்வி கேட்கவே, உஷாரான இருவரும் டூவீலரில் ஏறி தப்ப முயன்றனர். இருவரையும் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.அவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தபோது, வெண்கல விளக்குகள் மற்றும் கட்டிங் பிளேயர், இரும்பு கட்டர், கத்தி உள்ளிட்டவை இருந்தன. இதனால் இருவரையும் தங்கள் பாணியில் கவனித்த மக்கள், குண்டடம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், உடுமலை யு.கே.பி.,நகர் சரவணகுமார், 43; பெரியகுளம் செங்குளத்துப்பட்டி செல்வேந்திரன், 21; என்பதும் தெரிந்தது. பையில் இருந்த கோவில் மணிகள், கரிய காளிபுதுாரில் ஒரு கோவிலில் திருடியதும் தெரிந்தது. இருவரையும், கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement