இந்த வாரம் எப்படி இருக்கும்?

நியுட்ரன்: வணக்கம் டவுனு. திங்கள்கிழமை ஒரு நாள் நான் லீவுன்னு சொல்லீட்டு போனாலும் போனீங்க அப்பு தன் கைவரிசையை அன்னைக்கு முழுசா காட்டீட்டாரு.

அப்பு: எதிராளி இல்லாதப்பதானே நினைச்சதை சாதிச்சுக்கிட முடியும்!.

டவுனு: ஆனாலும் வாராந்திர அளவுல 187 புள்ளிகள்தானே ஏத்துனீங்க.

நியுட்ரன்: அதுவேணா கரெக்ட்!

டவுனு: ஒன்னு பார்த்தீங்களா நியுட்ரன்? போன வாரம் திங்கள் கிழமை ஒப்பனிங்கிற்கும் வெள்ளிக்கிழமை குளோசிங்கிற்கும் நடுவே கிட்டத்தட்ட வித்தியாசமே இல்லை. வாரம் பூரா என்ன பண்ணாறாமாம் அவரு?

நியுட்ரன்:
இப்படியெல்லாம் பேசப்படாது. 346 புள்ளிகள் அளவிலான வாராந்திர ரீதியிலான ஸ்விங் இருந்துச்சு. என்ன அப்பு சைலன்ட்டா இருக்கீங்க. டவுனு இப்படி சொன்னதுக்கு ரியாக்ஷனையே காணோமே!

அப்பு: மறப்போம் மன்னிப்போமுங்குற பாலிசிய நான் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

நியுட்ரன்: வர்ற வாரத்துல 'இன்ப்ளேஷன் ரேட்', எம்3 பணப்புழக்கம், மொத்தவிலை அளவீட்டில் பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி/அவற்றில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, பயணியர் வாகன விற்பனை, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

பழைய வீடுகள் விற்பனை நிலவரம், பணவீக்க விகிதம், உற்பத்தி நிறுவனங்களின் விலை குறியீடு, சில்லரை விற்பனை நிலவரம், மிச்சிகன் கன்ஸ்யுமர் சென்டிமெண்ட் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்குது.

டவுனு:
முக்கிய டேட்டா வெளியீடுகள் ஏதுமில்லாத மாதிரி இருக்குது.

நியுட்ரன்: 24,410/ 24,245 / 24,110 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,750/24,935/25,070 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 24,590தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.

அப்பு: சப்போர்ட், ரெசிஸ்டென்ஸெல்லாம் தாறுமாறா இருக்குது.

நியுட்ரன்: கொஞ்ச நாளா இப்படி இருக்கறதுதான் சகஜமாயிச்சே சார்.

டவுனு: வர்ற வாரம் எப்படிப்போகும் நியுட்ரன்

நியுட்ரன்:
தலை இருக்க வால் ஆடப்படாது.

அப்பு: இப்பத்தான் கரெக்ட்டா பேசறீங்க நியுட்ரன்.

நியுட்ரன்: பணிவா பேசுனா உடனே கலாய்ப்பீங்களே. போனவாரம் ஒரு நாள் முழுக்க சந்தை என் கன்ட்ரோல்ல இருந்துச்சு. அதை மறந்துடாதீங்க.

அப்பு: அப்பப்ப உங்களுக்கு அசகாய பலம் வந்துடுது நியுட்ரன்.

டவுனு: ஆடிக்கொருதரம் அமாவாசைக்கு ஒருதரம்தானே!

நியுட்ரன்: மறுபடியும் கிண்டல்.

அப்பு: போன வாரக்கடைசியில பெரிய டெக்னிக்கல் மாற்றம் இல்லாமல் ஒன்றிரண்டு நாள் இருந்துச்சு. அதனால வர்ற வாரம் கன்சலிடேஷன் மோடுக்கு போயிடுமோன்னும் பயமா இருக்கு.

நியுட்ரன்: அப்படி கிண்டல் பண்ணீங்க. இப்ப கன்சாலிடேஷனுங்கிறீங்க. என்னோட இன்னோரு பேர் அதுதானே!

டவுனு: கோவப்படாதீங்க நியுட்ரன். உங்கள் சேவை சந்தைக்கு அவசியம் தேவை.

நியுட்ரன்: கிண்டல் பண்றது. அப்புறம் சமாதானம் பண்றதுன்னுதான் போயிட்டிருக்கு.

டவுனு: உலகமே அப்படித்தானே போகுது நியுட்ரன்.

நியுட்ரன்: ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க. இந்த வாரம் எனக்கு வாய்ப்பே இருக்காது.

அப்பு: யாரு நியுட்ரனா பேசுறது! குரலே மாறிடுச்சு.

நியுட்ரன்: ஆமாம். எனக்கென்னவோ இந்த வாரம் வாலட்டைலிட்டி கொஞ்சம் துாக்கலா இருக்க வாய்ப்பு இருக்குன்னு தோணுது.

அப்பு: அப்படியே ஒவ்வொரு நாளும் எத்தனை புள்ளி ஏற்ற இறக்கம் இருக்குமுன்னு சொல்லீட்டிங்கன்னா நோட் பண்ணிப்போம்.

நியுட்ரன்: எனக்கு தெரியும் இந்த நக்கல் வார்த்தைகள் வருமுன்னு. ஆனாலும் நான் சொல்றதுதான் நடக்கப்போகுது.

டவுனு: நியுட்ரன் ஏதாவது எக்கச்சக்கமா நட்டம் பண்ணி உமக்கு மனப்பிறழ்வு ஏதாவது வந்துடுச்சா? இவ்வளவு அழுத்தம் திருத்தமா பேசமாட்டீங்களே. பயந்து பணிவால்ல பேசுவீங்க.

நியுட்ரன்: வேண்ணா அப்புவை கேட்டுப்பாருங்க..

அப்பு: அவரு சொல்ற மாதிரி நடக்க அதிக வாய்ப்பு இருக்குதுங்குறதுதான் உண்மை. அதுதான் என்னோட கணிப்பும்.

டவுனு: வாலட்டைலுன்னா எனக்கு கொண்டாட்டம்தான். நான் இல்லாம சந்தையில ஏது வா லட்டைலிட்டி.

அப்பு: எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. ரொம்ப நாளாச்சு இளநீர் குடிச்சு. வாங்க குடிக்கலாம். உடம்புக்கு நல்லது என்று சொல்ல மூவரும் இளநீர் கடையை நோக்கி நகர்ந்தனர்.

Advertisement