காதலியை கொலை செய்த இந்திய மாணவன்; அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்ப முயன்ற போது கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் காதலியை கொலை செய்து விட்டு, ஜெர்மனிக்கு தப்பியோடிய இந்திய மாணவனை, போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது; அரிசோனா பல்கலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜூலிசா ரூபி சலாசர் என்ற 19 வயது பெண், கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். சலாசரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இக்கொலை வழக்கில் சலாசரின் தோழிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், அவரது காதலனான இந்தியாவைச் சேர்ந்த வருண் பாட்சிகாரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், சம்பவத்திற்குப் பிறகு டக்சன் நகரை விட்டு வெளியேறிய வருண், ஹூஸ்டன் நகருக்குச் சென்று அங்கிருந்து ஜெர்மனியின் பெர்லின் நகரத்திற்கு விமானத்தில் தப்பிச் சென்றுள்ளார். மேலும், அங்கிருந்து இந்தியாவுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், வருண் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டின் மூலம், அவரை விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். விரைவில் அவர் அரிசோனா நகருக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரிசோனா பல்கலையில் 'பிசினஸ் அனலிட்டிக்ஸ்' படித்து வந்த வருண், கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மீது வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement