மது உ ற்பத்தியில் தவறான தகவல்; டியாஜியோவுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எச்சரிக்கை
புதுடில்லி: 'டியாஜியோ இந்தியா' நிறுவனத்தின் ராயல் சேலஞ்ச் விஸ்கி லேபிளில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதாக, உணவு பாதுகாப்பு ஆணையமான 'எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,' எச்சரித்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
ராயல் சேலஞ்ச் விஸ்கி, அமெரிக்க ஓக் மர பீப்பாய்களில் பதப்படுத்தப்பட்டதாக அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஸ்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மது கலவையில் பெரும்பகுதி, ஓக் மர பீப்பாய்களில் முழுமையாக பதப்படுத்தப்படவில்லை.
எனவே, முழு விஸ்கியும் அமெரிக்க ஓக் மர பீப்பாய்களில் பதப்படுத்தப்பட்டதாக குறிப்பிடுவது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. மேலும், மது கலவையில் மிக குறைந்த வயதுடைய விஸ்கியின் வயதையே குறிப்பிட வேண்டும். லேபிளில் 'ஸ்காட்ச்' என பொதுவாக குறிப்பிடாமல், அதன் வகையையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லேபிள் தொடர்பாக ஆணையம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருவதாகவும், உயர்ந்த தரநிலைகளை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் டியாஜியோ இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, விதிமுறைக்கு மாறான செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறி, மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட ராயல் சேலஞ்ச் மற்றும் ஆன்டிக்விட்டி புளூ உள்ளிட்ட சில மதுபானங்களின் விற்பனைக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.