தேசிய குடற்புழு நீக்க 7.11 லட்சம் மாத்திரைகள் வழங்கல்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு 7.11 லட்சம் பெண்கள், மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கும் நிகழ்ச்சியை சூலக்கரையில் கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5.78 லட்சம் குழந்தைகளுக்கு, 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1.33 லட்சம் பெண்களுக்கு என மொத்தம் 7.11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
முகாமில் 292 கிராம சுகாதார செவிலியர்கள், 1504 அங்கன்வாடி பணியாளர்கள், 3280 பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடக்கிறது. மேலும் 11 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 22 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரிகரம் குழுக்களும், 11 வட்டார மருத்துவ அலுவலர்கள், இரண்டாம் நிலை அலுவலர்கள் இம்முகாமில் பார்வையாளராக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண் மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சி, உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும்.
குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்வதாலும் ரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.
மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமிகளுக்கு, பெண்களுக்கு வரும் ஆக.17ல் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், மருத்துவ அலுவலர்கள், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.