புதுச்சேரியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க விரிவான திட்டம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 5.80 கோடி மதிப்பில் 130 புதிய பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட உள்ளன.
புதுச்சேரி பொதுப்பணித்துறையின் சார்பில் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் சட்டசபையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பொதுப்பணித்துறைச் செயலர் முத்தம்மா, தலைமைப் பொறியாளர் வீரசெல்வன், சிறப்பு அலுவலர் நிர்மலா, கண்காணிப்பு பொறியாளர்கள் சுந்தரமூர்த்தி, சந்திரசேகரன் மற்றும் அனைத்துக் கோட்டச் செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து நிதி ஒப்பந்தப்புள்ளி கோப்புகளையும் இம்மாதம் 12ம் தேதிக்குள்ளும், விரிவான மதிப்பீடு மற்றும் டெண்டர் கோரும் பணிகளை வரும் 14ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இ.சி.ஆர் மற்றும் நகரச் சாலைகளில் விளக்குகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளைத் தடையில்லா சான்றிதழ் மற்றும் நிர்வாக அனுமதி பெற்றவுடன் தொடங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
கோரிமேடு மற்றும் காலாப்பட்டு எல்லை நுழைவாயில்களில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கதிர்காமம் கலைக் கல்லுாரிக்கு நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலை களைய வேண்டும். நிலுவையில் உள்ள ரூ. 48 கோடி மதிப்பிலான கலைக்கல்லுாரி பணிகளை உடனே துவங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் ரூ. 5.80 கோடி மதிப்பில் 130 புதிய பஸ் நிறுத்தங்களில் தலா 7 லட்சம் ரூபாய்க்கு பயணியர் நிழற்குடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. வடிவமைப்பு ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான டெண்டர் இறுதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், நேரு வீதி முதல் அய்யங்குட்டிபாளையம் வரை யு -வடிவ கால்வாய் அமைக்கப்படும். இக்கால்வாய்களைப் பொதுப்பணித்துறையே நேரடியாகப் பராமரிக்க வேண்டும் எனப் அறிவுறுத்தப்பட்டது.
அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் பேசுகையில், 'புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை உடனடியாகத் தயாரிக்க வேண்டும். மேலும், 50 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க இடங்கள் விரைவில் தேர்வு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு விரைந்து தீர்வு காணச் செயலர் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். செலவினங்களைப் போர்க்கால அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்' என்றார்.