இந்திய வரைபடத்தில் தவறு; சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனைக்கு மோடி பாராட்டு

8

-நமது சிறப்பு நிருபர்-

​​கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின்போது, இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பிரதமர் மோடி பாராட்டினார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வீரர்கள் இருந்த ஒரு உணவகத்தில் இந்தியாவின் வரைபடம் தவறாக அச்சிடப்பட்டிருப்பதை குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா கவனித்துள்ளார். அந்த வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்கள் விடுபட்டிருந்தன.

அதனை உடனடியாக உணவக நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று லவ்லினா கண்டனம் தெரிவித்தார். அவரது எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த உணவக நிர்வாகம் தவறை உணர்ந்து வரைபடத்தை சரிசெய்வதாகத் தெரிவித்து மன்னிப்பு கோரியது.

இந்நிலையில் காமன்வெல்த் பதக்கம் வென்ற வீரர்களைச் சந்தித்துப் பேசியபோது, லவ்லினா காட்டிய தேசப்பற்று மற்றும் விழிப்புணர்வை பிரதமர் மோடி பாராட்டி கவுரவித்தார். 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினாவிடம், "என்ன ஆச்சு, நீங்க அந்த ரெஸ்டாரன்ட் ஆளோட சண்டை போட்டுட்டு இருந்தீங்களா?" என்று பிரதமர் கேட்டார்.

இதற்கு லவ்லினா சிரித்துக்கொண்டே, "அது ஒரு மகிழ்ச்சியான தருணம் ஐயா, நாங்கள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போது தவறாக சித்தரிக்கப்பட்டிருந்த வரைபடத்தை கண்டேன். என் ஆட்சேபத்தை அவர்களிடம் தெரிவித்தேன், அவர்களும் மாற்றங்களைச் செய்துவிட்டார்கள்," என்று பதிலளித்தார்.

"அந்த வரைபடத்தை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து அவர்களிடம் பேசியதை பாராட்டுகிறேன். அந்த வீடியோ ஒரு சாதாரணமானதல்ல. அது மக்களால் மிக நீண்ட காலத்திற்கு நினைவில் கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.

Advertisement