காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி : விக்கிரவாண்டியில் லாரி டிரைவர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே காயங்களுடன் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தையடுத்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி, ராதாபுரம் அடுத்த செய்யாத்துவிண்ணான் பாளையம், புது நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 55; ஓட்டலில் சப்ளையராக பணி புரிந்தார். இவர், கடந்த 8ம் தேதி இரவு 9.00 மணியளவில் ராதாபுரம் பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் சண்முகம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் சிவலிங்கம், 49; லாரி டிரைவர். இவர், 8ம் தேதி இரவு திருக்கனுாரில் மது அருந்திவிட்டு போதையில் இரவு 9.30 மணிக்கு பஸ்சில் வீடு திரும்பியுள்ளார்.

பஸ்சில் டிக்கெட் எடுக்காததால் வழியில் ராதாபுரம் அருகே பஸ்சிலிருந்து கண்டக்டரால் கீழே இறக்கி விடப்பட்டவர் போதையில் தள்ளாடிபடியே நடந்து வந்துள்ளார்.

வழியில், ராதாபுரம் சக்திவேல் சமோசா கடை அருகே, ஏற்கனவே அங்கு போதையில் இருந்த சண்முகத்திடம் தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சண்முகம் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சிவலிங்கத்தை தாக்கியுள்ளார்.

அதே கட்டையை சண்முகத்திடமிருந்து பறித்து சிவலிங்கம் பலமாக தாக்கியதில், சண்முகம் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

சிவலிங்கம் அருகிலிருந்த ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த சிவலிங்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கொலை நடந்த 18 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் குழுவினரை எஸ்.பி., மதிவாணன், டி.எஸ்.பி., சரவணக்குமார் பாராட்டினர்.

Advertisement