வெங்காய விதை உற்பத்தியில் கவனம்! வேளாண் பல்கலை., அறிவுரை
உடுமலை: சின்னவெங்காயம் விதை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், உற்பத்தி மற்றும் சேமிப்பு முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோவை வேளாண் பல்கலை., சார்பில், அறிவுறுத்தப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில், சின்னவெங்காய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்கின்றனர்.
விதை உற்பத்திக்காக பிரத்யேமாக செடிகளை பராமரித்து அவற்றை பூக்க விட்டு, அதிலிருந்து விதை உற்பத்தி செய்கின்றனர்.
இத்தகைய விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதன்படி, வெங்காய விதை உற்பத்தி செய்யும் பாத்திகளில், மாறுபட்டு தெரிகின்ற எல்லா பயிர்களையும் மற்றும் களைகளையும் நீக்க வேண்டும்.
செடிகளின் உயரம், இலைகளின் நிறம் பூங்கொத்துக்களின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மைகளைக் கொண்டு கலவன்களை நீக்கலாம். இவ்வாறு நீக்குவதால் உண்மையான விதை நல்ல தரமானதாக கிடைக்கும்.
அறுவடை விதைகள் நன்கு முதிர்ந்த பின் அறுவடை செய்ய வேண்டும். வெங்காயத்தில் விதை அறுவடைத்தருணத்தில், பூங்கொத்தில், 50 சதவீத கறுப்பு விதைகள் வெளியே தெரியும். அச்சமயத்தில் பூங்கொத்துக்களை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.
இவ்வாறு 3 அல்லது 4 முறைகள் 4,- 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பூங்கொத்துக்களை சாக்குப்பைகளின்மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும். பூங்கொத்துக்களில் இருந்து விதைகளை பிரித்தெடுத்து, அதன் தரத்தினை மேம்படுத்துதல் அவசியம்.
விதை பிரித்தெடுக்கும் பொழுது, விதை காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும். பின்பு சரியான முறையில் உலர வைத்து பாதுகாக்க வேண்டும்.
நன்கு உலர வைத்த துணிப்பைகளில் போட்டு, கைகளால் கசக்கியும் அல்லது வளையும் தன்மை கொண்ட மிருதுவான குச்சிகள் கொண்டு தட்டியும், விதைகளை பிரித்தெடுக்கலாம். அவ்வாறு பிரித்தெடுத்த விதைகளுடன் கூடிய தூசிகளை, காற்றில் துாற்றி பிரித்தெடுத்துவிட வேண்டும்.
விதை உலர்த்துதல் பிரித்தெடுத்த விதைகளை முறைப்படி உலர வைக்க வேண்டும். சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில், 8 முதல் 10 மணி நேரம் வரை உலரவைக்க வேண்டும். பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும்.
விதைகளை வெயிலில் உலர்த்தும் போது தினமும் காலை, 8:00 முதல் 12:00 மணி வரையிலும், பின்னர் 3:00 முதல் 5:00 மணி வரையிலும் உலர்த்தலாம்; 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம்.
ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும், வெயிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும், விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
விதை சுத்திகரிப்பு விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், துாசி முதலியவற்றையும் அகற்றிவிட வேண்டும். பின்பு, விதைகளின் உருவம், பரிமாணம், கன அடர்த்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை உயர்த்தலாம்.
விதைகளை சலித்து மேலே தங்கும் தரமான, அடர்த்தியான விதைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.