அரசு மாணவியர் விடுதி முன் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் தவிப்பு

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அரசு மாணவிகள் விடுதி முன் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு, எரியாத தெருவிளக்குகள் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் வசிக்கின்றனர். அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. குடிநீர் விநியோகம் பாதித்ததால் நிலத்தடி நீரையே மக்கள் அனைத்து தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். குடிநீர் மோட்டார் பழுது, குழாய் உடைப்பு என அடிக்கடி விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண், பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. தெருவிளக்குகள் எரியதாதல் இரவில் கிராமம் இருளில் மூழ்கிறது. அகற்றப்படாத குப்பை சுத்தம் செய்யாத வடிகால் இவற்றால் சுகாதார பாதிப்பு நிலவுகிறது. ஊராட்சியின் பிரச்சனைகள் மக்கள் கூறியதாவது:



சுத்திகரிப்பு இயந்திரம் பழுது: ஜக்கையன், சண்முகசுந்தரபுரம்: ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்தால் ரூ.5 செலவில் 20 லிட்டர் குடிநீரை மக்கள் பெற முடியும். சாக்கடையில் குப்பை சேர்வதால் பல இடங்களில் அடைப்பு ஏற்படுகிறது. விநாயகர் கோயில் அருகே விரிவாக்க பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.



மாணவிகள் விடுதி முன் தேங்கும் கழிவுநீர்

சரவணன்,சண்முகசுந்தரபுரம்: 30 குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. மையத்திற்கு தண்ணீர் வசதி இல்லை. பொறுப்பாளர்கள் வாளியில் தண்ணீர் பிடித்து வந்து கழிப்பறைக்கு பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கான கழிப்பறையும் சேதமடைந்துள்ளது. புதிய நூலக கட்டடம் திறக்கப்படவில்லை. கிராமத்தில் இருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவு நீரும் மாணவிகள் அரசு விடுதி முன்பு தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. கழிவு நீரை கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு இடங்களில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து பல மாதங்களாக சரி செய்யவில்லை.



சமுதாய கூடத்தில் அபாயம் சுப்புராஜ், சண்முகசுந்தரபுரம் : சமுதாயக்கூடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்கும் நடவடிக்கை இல்லை. விசேஷ நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். சமுதாயக்கூடத்தின் பின்புறம் உள்ள ஊரணியில் குப்பை கொட்டி அசுத்தம் செய்கின்றனர். கிராமத்தில் குப்பை அள்ளுவதற்கு கொடுக்கப்பட்ட டிராக்டரை பயன்படுத்துவதில்லை. கிராமம் முழுவதும் சுகாதார பாதிப்பு நிலவுகிறது. தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில் புதிய இணைப்புகளில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.







Advertisement