மருத்துவ படிப்புக்கான தரவரிசை வெளியீடு: விழுப்புரம் மாணவர் முதலிடம்

1

சென்னை: எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கு, மொத்தம் 72,633 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

அதில், அரசு ஒதுக்கீட்டில் 35,926; 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 3,625; நிர்வாக ஒதுக்கீட்டில் 26,956 பேர் இடம் பெற்றுள் ளனர்.

அரசு ஒதுக்கீடு தரவரிசையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடனும், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தரவரிசையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் தினேஷ் 599 மதிப்பெண்களுடனும் முதலிடம் பிடித்தனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு, வரும் 13ம் தேதி 'ஆன்லைன்' வழியே நடக்க உள்ளது. பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட மருத்துவ துணை படிப்புக ளுக்கான தரவரிசை பட்டியலும் நேற்று வெளியிடப்பட்டது.

அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:

மருத்துவ படிப்பில் சேர, பலர் போலி ஆவணங்கள் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு, போலி ஆவணம் பயன்படுத்தி ஐந்து பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஒரு மாணவர் 'நீட்' தேர்வில், தான் எடுத்த 170 மதிப்பெண்ணை, 552 ஆக திருத்தியுள்ளார். அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement