அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
ஜெய்ப்பூர்: '' அரசியலமைப்பு புத்தகத்தின் நகலை கைகளில் வைத்திருப்பதில் மட்டும் பயனில்லை. அதனை நம்ப வேண்டும்,'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் இடங்கள் எல்லாம், பொது மக்கள் திரங்கா யாத்திரையில் ஆர்வமுடன் வந்து பங்கேற்பதை பார்க்க முடிகிறது. பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்பதை பார்க்கலாம்.
காங்கிரசார், அரசியலமைப்பு புத்தகத்தின் நகலை கைகளில் வைத்து இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை நம்பி, மற்றவர்களிடம் கோரிக்கைகளை வைக்கும் போது, அதற்கு முன்பு, அதனை பின்பற்ற வேண்டும்.
பார்லிமென்ட் இயங்க அனுமதிக்க வேண்டும். அதற்கு, அவர்களின் கோரிக்கை மத்திய அமைச்சர் அமித்ஷா வந்து பதிலளிக்க வேண்டும் என்பது. விவாதத்தில் பங்கேற்று அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார். அதன் பிறகும் பார்லிமென்ட் சுமுகமாக இயங்கவில்லை. எனவே, அரசியலமைப்பு புத்தகத்தின் நகலை கையில் வைத்திருப்பதால் மட்டும் பயனில்லை என்பது எனது நம்பிக்கை.
சைகை வாயிலாக பிரதமரை அவமதித்த விதம், அவர்களின் தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது புதிது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.