பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
புதுடில்லி : 'பணியிடங்களில் பாலியல் தொந்தரவு தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், 510 புகார்கள் பெறப்பட்டுள்ளது' என, பார்லிமென்டில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், பணியிடங்களில் பாலியல் தொந்தரவு தொடர்பாக, 'பாலியல் துன்புறுத்தல் மின்னணு பெட்டி' என்ற பெயரில், 'https://shebox.wcd.gov.in என்ற இணையதளம், 2024ல் தொடங்கப்பட்டது. இதில், நாடு முழுதும், 10க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட 1.89 லட்சம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்துள்ளன. அதற்கு குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களில் இருந்து வரும் புகார்களை, அந்தந்த மாவட்டங்களின் வட்டார குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வி.சி.க., தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், லோக்சபாவில், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மே்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் சாவித்திரி தாகூர் அளித்த பதில்:
பாலியல் துன்புறுத்தல் மின்னணு பெட்டி வாயிலாக, 2024ல் இருந்து இதுவரை, மத்திய அரசு நிறுவனங்களில், 223 புகார்கள் பெறப்பட்டன. அதில், 139 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மாநில அரசு நிறுவனங்களில், 157 புகார் பெறப்பட்டு, 61 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில், 130 புகார்களில், எட்டுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 510 புகார்கள் பெறப்பட்டு, 208க்கு தீர்வு காணப்பட்டுள்ளது; மற்ற புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.