மீனாட்சி அம்மன் கோயில் சொத்து வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓ., கைது

1

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மோசடியாக பத்திர பதிவு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் வி.ஏ.ஓ., அரசன் கைது செய்யப்பட்டார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் அழகர்கோயிலுக்கு சேவை செய்ய 1930 ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள அசோதா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் தொடர்பான பத்திர பதிவு மோசடி வழக்கில் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதில் கைது செய்யப்பட்ட துணை கலெக்டர் அன்பழகன் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது முன்னாள் வி.ஏ.ஓ., அரசனும், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் அறக்கட்டளை சொத்துக்கள் தனிநபர்களின் பெயருக்கு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.

இவ்வழக்கில் ஏற்கனவே ராஜ்குமார், இளையராஜா, துணை கலெக்டர் அன்பழகன், காளிகுமார் கைது செய்யப்பட்டு இருந்தனர். தற்போது முன்னாள் வி.ஏ.ஓ., அரசன் கைதாகி இருப்பது விசாரணையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர்.

Advertisement