கடையில் கவரிங் நகையை வைத்து தங்க நகை திருடிய பெண் கைது

திருப்பத்துார் :திருப்பத்துார் அருகே நகைக்கடையில், கவரிங் நகையை வைத்து விட்டு, தங்க நகையை திருடிய இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.


திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ், 55. டவுனில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, இளம்பெண் ஒருவர் கடைக்கு வந்து, மோதிரம் கேட்டதால் ஊழியர்கள் காண்பித்தனர்.
அதை பார்ப்பது போல் நடித்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில், 2 கிராம் தங்க மோதிரத்தை திருடி, அதற்கு பதில் கவரிங் மோதிரத்தை வைத்து விட்டு, தன்னிடம் பணம் குறைவாக உள்ளதால், வீட்டிற்கு சென்று எடுத்து வருவதாக இளம்பெண் கூறிச்சென்றார்.
கடை ஊழியர்கள் நகைகளை எடுத்து வைத்தபோது, ஒரு மோதிரம் மட்டும், கவரிங் என தெரிந்தது. கடையிலுள்ள 'சிசிடிவி' கேமரா பதிவை பார்த்தபோது, நகை வாங்க வந்த இளம்பெண் தங்க மோதிரத்தை திருடிக்கொண்டு, கவரிங் நகையை மாற்றி வைத்தது தெரிந்தது.
சற்று நேரத்தில் அப்பெண் மீண்டும் கடைக்கு வந்து நகைகளை காண்பிக்க கேட்டுள்ளார். சுதாரித்த கடை உரிமையாளர் ரமேஷ், தன் மகன் பிரசாந்த், 35, பக்கத்து கடைக்காரர் இம்ரான், 35, ஆகியோரை வரவழைத்து இளம்பெண்ணை பிடித்தார். அவர், சில நாட்களுக்கு முன் இம்ரான் கடையிலும், 2.5 கிராம் தங்க மோதிரத்தை திருடியது தெரியவந்தது.
அப்பெண்ணை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், நகையை திருடிய இளம்பெண் வாணியம்பாடியை சேர்ந்த ஷாஸியா, 25, என, தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement