மத்திய அமைச்சருக்காக அமைத்த கிரீன் மெஷினால் புதுச்சேரி விமான நிலையம் எதிரே விபத்து அபாயம்  

புதுச்சேரி: புதுச்சேரி விமானம் நிலையம் எதிரே, மத்திய அமைச்சர் வருகைக்காக அமைக்கப்பட்ட கிரீன் மெஷ் சாரத்துடன் சரிந்து விழுந்து அச்சுறுத்தி வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதுச்சேரிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவரது, வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன் ஒரு பகுதியாக, லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு எதிரே அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியைப் பார்வையிலிருந்து மறைப்பதற்காக, கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பச்சை நிறத் தடுப்பு வலைகளான கிரீன் மெஷ் அமைக்கப்பட்டன. 200 மீட்டர் தொலைவிற்கு சாரம் அமைத்து இந்த தடுப்புகள் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தன.

அமைச்சரின் பயணம் முடிந்து நாட்கள் பல கடந்தும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த தடுப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. இந்த கிரீன் மெஷ் வலை ஒரு பகுதி புதுச்சேரி விமான நிலைய நுழைவாயில் எதிரே சாரத்துடன் சரிந்து விழுந்து சாலையில் கிடக்கிறது. மேலும், பல இடங்களில் வலைகள் கிழிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றன.

லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால், சாரம் போட்டு கட்டப்பட்ட இந்த அமைப்பு மிகவும் பலவீனமடைந்து ஆடிக் கொண்டிருக்கிறது.

மழை மற்றும் பலத்த காற்றினால் இந்த சாரம் எப்போது வேண்டுமானாலும் நடைபாதையில் செல்பவர்கள் மீது சரிந்து விழும் அபாயம் நிலவுகிறது. நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கும், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தத் தடுப்பு வலைகளை, அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன், பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும்.

Advertisement