திருட்டு சம்பவங்கள் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பாலப்பன்பட்டி மக்கள் வலியுறுத்தல்

கள்ளிமந்தையம், ஆக.14-

பாலப்பன்பட்டி கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் பாலப்பன்பட்டி கிராமம் உள்ளது. அப்பியம்பட்டி நால்ரோடு- தொப்பம்பட்டி ரோட்டில் உள்ள இந்த கிராமத்தை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து திருப்பூர் மாவட்ட எல்லை பகுதி சில கி.மீ., துாரத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் பாலப்பனபட்டி கிராமத்தில் திருட்டு சம்பவங்கள் சமீபமாக அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் டூவீலரில் வந்த மூவர் வீடுகளின் முன் நிறுத்தி இருந்த டூவீலர்களை திருட முயன்றனர். விழித்துக்கொண்ட மக்கள் சத்தமிட்டதால் தாங்கள் கொண்டு வந்திருந்த டூவீலரை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அந்த டூவீலரில் நம்பர் பிளேட் இல்லை.

மற்றொரு சம்பவத்தில் புங்கமுத்துார் கிராமத்தில் இருந்து ஆட்டுக்கிடா ஒன்றை டூவீலரில் திருடி வந்தவர் பொதுமக்கள் துரத்தவே பாலப்பன்பட்டியில் கிடாயை இறக்கிவிட்டு தப்பினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் டூவீலரில் வந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் பிடித்து கள்ளிமந்தையம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பாலப்பன்பட்டி கிராம மக்கள் துாக்கத்தை தொலைத்து வருவதாக கூறுகின்றனர். ஊராட்சி பகுதிகள், ரோடுகளின் முக்கிய சந்திப்புகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும். கடைக்கோடி கிராமங்களுக்கும் இரவு ரோந்து பணியை விரிவுபடுத்தி மக்களின் அச்சத்தை போக்க கள்ளிமந்தையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement