செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
வானுார்: வானுார் அருகே குவாரியில் இருந்து செம்மண் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
வானுார் அடுத்த கடகம்பட்டு பகுதியில் செம்மண் குவாரிகள் உள்ளது. இங்கு சில குவாரியில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக விழுப்புரம் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் மஞ்சு தலைமையில் அதிகாரிகள் திருவக்கரை பஸ் நிறுத்தம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கடகம்பட்டில் இருந்து திருவக்கரை நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தியதும், டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்தபோது, செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 3 யூனிட் மெம்மண்ணுடன், டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.