திண்டுக்கல் அணி கலக்கல்: சேலம் அணியை வென்றது

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல் அணி 81 ரன் வித்தியாசத்தில் வென்றது.

திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல், சேலம் அணிகள் மோதின. மழையால் தலா 15 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற சேலம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
திண்டுக்கல் அணிக்கு வினீத் (45), ஷிவம் சிங் (38) நல்ல துவக்கம் தந்தனர். விமல் குமார் (35), சன்னி சைனி (29) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் பாபா இந்திரஜித், 25 பந்தில், 73 ரன் (8X6, 3X4) விளாசினார். திண்டுக்கல் அணி 15 ஓவரில் 239/5 ரன் எடுத்தது.

சேலம் சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு கேப்டன் அபிஷேக் (38) ஆறுதல் தந்தார். ஹரி நிஷாந்த் (8), விவேக் (7) உள்ளிட்ட மற்றவர்கள் சோபிக்கவில்லை. சேலம் அணி 15 ஓவரில் 158/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அஜித் ராம் (14), பொய்யாமொழி (13) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் சார்பில் விஜு அருள் 3 விக்கெட் கைப்பற்றினார்.



மதுரை அணி ஏமாற்றம்

மற்றொரு லீக் போட்டியில் மதுரை, சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

சேப்பாக்கம் அணிக்கு கேப்டன் நாராயண் ஜெகதீசன் (79) அரைசதம் கடந்து கைகொடுத்தார். அபாரமாக ஆடிய மோகித் ஹரிஹரன் சதம் (108 ரன், 10X6, 4X4) விளாசினார். சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 240/2 ரன் எடுத்தது. ஸ்வப்னில் சிங் (42) அவுட்டாகாமல் இருந்தார்.

கடின இலக்கை விரட்டிய மதுரை அணி 20 ஓவரில் 201/7 ரன் மட்டும் எடுத்து 39 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹரி ராவேகந்திரா (98) நம்பிக்கை தந்தார். சேப்பாக்கம் சார்பில் பிரேம் குமார், ஸ்வப்னில் சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.

Advertisement