இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் விழாவுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை விழாக்கோலம் பூண்டுள்ளது. தேசியக் கொடி ஏற்றுவதற்கான மேடை, சிறப்பு அழைப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்காகத் தனித்தனிப் பந்தல்கள் என, அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.

காலை 8:55 மணிக்கு விழா நடைபெற உள்ள காந்தி திடலுக்குக் காரில் வருகை தரும் முதல்வர் ரங்கசாமியை, தலைமைச் செயலாளர் சரத் சவுகான் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கிறார். காலை 9:00 மணிக்கு முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துகிறார்.

தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் பார்வையிடுகிறார். மீண்டும் மேடைக்குத் திரும்பும் முதல்வர், சுதந்திர தின உரையாற்றுகிறார். சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்குப் பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கிப் பாராட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து காவலர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது. நிறைவாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு அளிப்பு விழாவும் நடைபெறவுள்ளது.

புதுச்சேரியின் பிற பிராந்தியங்களான காரைக்கால் கடற்கரை சாலையில் வேளாண் துறை அமைச்சர் ராஜசேகரன், ஏனாமில் சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாகேவில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி, புதுச்சேரி மாநிலம் முழுதும் 2,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம், புது பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பும் சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement