என்று தணியும் இந்திய ஹாக்கி தாகம்... * தீருமா 51 ஆண்டு உலக கோப்பை ஏக்கம்
ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கி திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இந்திய அணி, 51 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆக. 15-30, ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் விளையாடுகின்றன. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய சுதந்திர தினத்தில், தனது முதல் சவாலில் வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
1975ல் சாம்பியன்
இந்திய அணி, 1975ல் உலக கோப்பை வென்றது. இதற்கு பின் சாதிக்கவில்லை. 51 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பை வெல்லும் உறுதியுடன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி காணப்படுகிறது. டோக்கியோ (2021), பாரிஸ் (2024) என தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்றது. 2025ல் ஆசிய கோப்பை கைப்பற்றியது. சமீபத்திய புரோ லீக் தொடரில் ஜெர்மனி, நெதர்லாந்தை வீழ்த்தியது. இதே போன்ற சிறப்பான ஆட்டம் தொடர்ந்தால், உலக கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். 'டிராக்-பிளிக் ஸ்பெஷலிஸ்ட்' கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோலாக மாற்றுவதிலும் வல்லவர். 417 சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த மத்திய கள வீரர் மன்பிரீத் சிங், தற்காப்பு பகுதியில் அமித் ரோஹிதாஸ் கைகொடுக்கலாம். ஹர்திக் சிங், ஜுக்ராஜ் சிங், மந்தீப் சிங், அபிஷேக், ரஜிந்திர் சிங், ஷிலானந்த் லக்ரா நம்பிக்கை தருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றது பின்னடைவு. இளம் கீப்பர் மோகித், சூரஜ் கர்கேரா துடிப்பாக செயல்பட வேண்டும். மனநல ஆலோசகர் பேடி அப்டன் சிறப்பு பயிற்சியில், நமது வீரர்கள் உடல், மனதளவில் தயாராக உள்ளனர். அடுத்த மாதம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு ஹாக்கியில் தங்கம் வென்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதி பெறலாம். இதற்கு உலக கோப்பை தொடர் சிறந்த அடித்தளமாக அமையும்.
காத்திருக்கும் வரலாறு
இன்றைய போட்டியில் உலக ரேங்கிங்கில் 8வது இடத்தில் உள்ள இந்தியா, வேல்ஸ் அணியை (15வது இடம்) எதிர்கொள்கிறது. சமீபத்தில் வேல்ஸ் அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டியில் பங்கேற்றது. இதனால் குறைத்து மதிப்பிட கூடாது. தொடரை வெற்றியுடன் இந்தியா துவக்க வேண்டும்.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,''நெருக்கடி எதுவும் இல்லை. கோப்பை வெல்வது எங்களது பொறுப்பு,''என்றார்.
மத்திய கள வீரர் மன்பிரீத் சிங், 34, கூறுகையில்,''தொடர்ந்து இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளோம். இதுவே எனது கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். கோப்பை வென்று, மறக்க முடியாத தொடராக மாற்ற விரும்புகிறேன்,''என்றார்.
இந்திய பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் கூறுகையில்,''உலக கோப்பை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறோம்,''என்றார்.
தோனி மந்திரம்
இந்திய பெண்கள் அணி சலிமா டேடெ தலைமையில் களமிறங்குகிறது. கோல்கீப்பர் பிச்சு தேவி கூறுகையில்,''இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் என் 'ரோல்-மாடல்'. அவரை போல பதட்டமான நேரத்தில் 'கூலாக' செயல்பட விரும்புகிறேன். சக கோல்கீப்பர் சவிதா பூனியா எனக்கு குரு போன்றவர். அவரிடம் இருந்து ஆட்ட நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்,''என்றார்.
பைனல் செல்லும் பாதை
உலக கோப்பை ஹாக்கி தொடரில், இம்முறை காலிறுதி கிடையாது. ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் பங்கேற்கும் தலா 16 அணிகள், தலா 4 பிரிவுகளாக லீக் சுற்றில் ('குரூப் ஸ்டேஜ்') விளையாடுகின்றன.
இதன் பின்,* ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் 8 அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் ஆக. 27, 28ல் நடக்கும். பைனல், ஆக. 29 (பெண்கள்), ஆக. 30ல் (ஆண்கள்) நடக்க உள்ளன.
இந்திய அணிகள்
ஆண்கள்
முன்களம்: தில்பிரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜபீத் சிங், மன்தீப் சிங், அபிஷேக்.
தற்காப்பு பகுதி: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யாஷ்தீப்.
மத்திய களம்: ராஜிந்தர் சிங், ஆதித்யா அருண், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நிலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்.
கோல் கீப்பர்: மோஹித், சுராஜ்.
பெண்கள்
முன்களம்: லால்ரெம்சியாமி, ருடுஜா, நவ்னீத் கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி
மத்திய களம்: நிக்கி பிரதான், சாக்சி, சுனேலிதா, சலிமா (கேப்டன்), நேஹா, தீபிகா சோரங்.
தற்காப்பு பகுதி: இஷிகா, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி, ஷில்பி, ஜோதி.
கோல் கீப்பர்: சவிதா, பிச்சு தேவி.
'19' அறிமுகம்
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஆண்கள் அணியில் 8, பெண்கள் அணியில் 11 என மொத்தம் 19 பேர் அறிமுகம் ஆகின்றனர்.
நான்காவது முறை
இந்திய அணியின் மன்தீப் சிங், மன்பிரீத் சிங் என இருவரும் நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கின்றனர்.
* பெண்கள் அணியில் சவிதா, நவ்னீத் கவுர், நிக்கி பிரதான், நேஹா, லால்ரெம்சியாமி என 5 வீராங்கனைகள் மூன்றாவது முறையாக உலக கோப்பை அரங்கில் களமிறங்குகின்றனர்.
சீனியர், ஜூனியர்
இந்திய அணியில் சீனியர் வீரராக மன்பிரீத் சிங் 34, ஜூனியர் வீரராக ஆதித்யா அர்ஜுன் 23, களமிறங்குகின்றனர்.
* பெண்கள் அணியில் கோல் கீப்பர் சவிதா 36, சாக்சி ராணா 18, 'சீனியர்-ஜூனியராக' உள்ளனர்.
லோகோ
ஹாக்கியின் வேகம், ஒற்றுமை உணர்வுகளுடன், ஆடுகளத்தில் உள்ள கோல் ஏரியாவை பிரதிபலிக்கும் வகையில் கோடுகள் இணைந்து, உலக ஹாக்கியின் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
'வாப்பிள்-பப்பிள்'
உலக கோப்பை ஹாக்கி சின்னமாக 'வாப்பிள்-பப்பிள்' உள்ளது. ஆடுகளத்தில் காணப்படும் வேகம், துல்லியத்தை 'வாப்பிள்' வெளிப்படுத்துகிறது.
மகிழ்ச்சி, ஆற்றல், உலக ஹாக்கியின் ஒற்றுமையை 'பப்பிள்' கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 அணிகள்
உலக கோப்பை ஹாக்கியில் 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
ஆண்கள் பிரிவு
ஏ: நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான்
பி: பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா
சி: ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா
டி: இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வேல்ஸ்
பெண்கள் பிரிவு
ஏ: நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான்
பி: அர்ஜென்டினா, ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்காட்லாந்து
சி: பெல்ஜியம், ஸ்பெயின், நியூசிலாந்து, அயர்லாந்து
டி: இந்தியா, சீனா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா
இதுவரை சாம்பியன்
உலக கோப்பை ஹாக்கி (ஆண்கள்) அரங்கில் இந்தியா (1975) இதுவரை ஒரு முறை மட்டும் சாம்பியன் ஆனது. பாகிஸ்தான் அதிகபட்சம் 4 முறை (1971, 1978, 1982, 1994) கோப்பை வென்றது. நெதர்லாந்து (1973, 1990, 1998), ஆஸ்திரேலியா (1986, 2010, 2014), ஜெர்மனி (2002, 2006, 2023) அணிகள் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. பெல்ஜியம் (2018) ஒரு முறை கோப்பை வென்றது.
* பெண்களுக்கான பிரிவில், நெதர்லாந்து அணி அதிகபட்சமாக 9 முறை (1974, 1978, 1983, 1986, 1990, 2006, 2014, 2018, 2022) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அர்ஜென்டினா (2002, 2010), ஆஸ்திரேலியா (1994, 1998), ஜெர்மனி (1976, 1981) அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றன.
இந்தியா எப்படி
உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் இந்திய அணிகளின் செயல்பாடு.
ஆண்கள்
ஆண்டு இடம்
1971 அரையிறுதி
1973 பைனல்
1975 சாம்பியன்
1978 6வது
1982 5வது
1986 12வது
1990 10வது
1994 5வது
1998 9வது
2002 10வது
2006 11வது
2010 8 வது
2014 9வது
2018 காலிறுதி
2023 9வது
பெண்கள்
1974 அரையிறுதி
1978 7 வது இடம்
1983 11வது
1998 12வது
2006 11வது
2010 9வது
2018 8வது
2022 9வது
2682 கோல்
உலக கோப்பை ஹாக்கி (ஆண்கள்) வரலாற்றில், 15 சீசனில் நடந்த 649 போட்டியில், 2682 கோல் பதிவானது.
* பெண்களுக்கான உலக கோப்பையில் 15 சீசனில் நடந்த 615 போட்டியில், 2066 கோல் அடிக்கப்பட்டது.
* ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் நெதர்லாந்தின் பால் லிட்ஜென்ஸ் (15 கோல், 1978) முதலிடத்தில் உள்ளார்.
* இந்தியா சார்பில் ராஜிந்தர் சிங் சீனியர், அதிகபட்சமாக 12 கோல் (1982) அடித்துள்ளார். இவரை அடுத்து சுர்ஜித் சிங் 11 (1973, 1975, 1978), ஆகாஷ்தீப் சிங் 10 (2014, 2018, 2023) கோல் அடித்துள்ளனர்.