காங்., தலைவரை இழிவுபடுத்திய விவகாரம் மாநில தலைவர் வைத்திலிங்கம் கண்டனம்
வைத்திலிங்கம் படம்
புதுச்சேரி: காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இழிபடுத்திய விவகாரத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு;
அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரகாண்ட் மாநிலம், யாதகிரி கல்வார்டு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த கூட்டம் முடிந்த பிறகு, அங்குள்ள பா.ஜ., தலைவர்கள், தொணடர்கள் கும்பலாக சென்று அந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும், புனிதப்படுத்துகிறோம் என, ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்.
வேண்டும் என்றே சாதி, இனத்தை வைத்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள். பட்டியலின இனத்தைச் சேர்ந்த தலைவர் என்பதால் வேண்டும் என்றே அவரை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை செய்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இது அவருக்கு ஏற்பட்ட இழிவு என்பதைவிட பட்டியலின மக்கள் அனைவருக்குமே அச்சுறுத்தல் தருகிற நிகழ்வாகத்தான் இதனை பார்க்கின்றேன்.
அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் இதனை செய்திருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள காங்., கட்சியின் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் அந்த செயலை செய்த பா.ஜ., வினர் மீது புகார் அளிக்க இருக்கிறார்கள்.
டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணத்தை சுதந்திர தின உரையிலாவது பிரதமர் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அத்தனை அதிகாரிகள் மீதும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாட்டின் எதிர்கால சுதந்திரம் முழுமையாக இருக்கும்’ என, குறிப்பிட்டுள்ளார்.