தங்கம் டெரிவேட்டிவ்ஸ் தினசரி வர்த்தகம் ரூ.2.22 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவில் நேரடியாக தங்கம் வாங்குவதைபோல, பங்கு சந்தை சார்ந்த டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகத்திலும் வேகமாக அதிகரித்து வருவது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
எம்.சி.எக்ஸ்., தரவுகளின்படி, 2025 - 26ம் நிதியாண்டில் தங்கத்திற்கான பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன் ஒப்பந்தங்களின் சராசரி தினசரி வர்த்தக மதிப்பு 2.22 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், விலை நிர்ணயம் மற்றும் முதலீட்டு முடிவுகளுக்காகவும் டெரிவேட்டிவ்ஸ் ஒப்பந்தங்களை நகை உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
மேலும், எம்.சி.எக்ஸ்., சந்தையில் தங்கத்துக்கு 1 கிலோ முதல் 1 கிராம் வரையிலான பல்வேறு ஒப்பந்த அளவுகள் வழங்கப்படுகின்றன.
இதனால், சிறு முதல் பெரிய முதலீட்டாளர்களும் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, தங்கம் இனி நகை அல்லது சேமிப்புக்கான பொருளாக மட்டுமின்றி, முதலீட்டு சொத்தாகவும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை காட்டுகிறது.