மின்வாரிய புகார்கள் தெரிவிக்கும் எண் துண்டிப்பு: மக்கள் அவதி

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் தடை, மின் கம்பி அறுந்து விழுதல், மரக்கிளை விழுதல் உள்ளிட்ட அவசர புகார்களை தெரிவிக்கும் வகையில், அரசின் சார்பில் தலைமை பொறியாளர் முதல் இளநிலை பொறியாளர் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் 94458 என்ற எண்ணில் தொடங்கும் பிரத்யேக செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், அந்த செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளும்போது "இந்த எண்ணுக்கான இன்கம்மிங் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது" என்ற குரல் ஒலிப்பதாக நுகர்வோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


சிம் கார்டுக்கான மாதாந்திர கட்டணத்தை அரசு செலுத்தாததே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கவோ, அவசர சேவைகளை பெறவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து மின் நுகர்வோர்கள் கூறுகையில், "அவசரத்திற்காக கொடுக்கப்பட்ட எண்களே செயல்படவில்லை என்றால் எப்படி? அரசு உடனடியாக நிலுவை தொகையை செலுத்தி, சேவையை சீரமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement