அவசியம் - லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி - கடத்தலை முழுமையாக தடுக்க நடவடிக்கை தேவை
கூடலுார், ஆக. 16-
கடத்தலை முழுமையாக தடுக்க தமிழக கேரள எல்லை லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பது அவசியம் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரள எல்லையோரத்தில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. கேரளா செல்ல குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு ஆகிய வழித்தடங்கள் உள்ளன. குமுளி மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகம். அருகில் தேக்கடி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இவ்வழியாக செல்கின்றனர். சபரிமலை உற்சவ நேரங்களில் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களும் அதிகமாக இவ்வழியாக செல்லும்.
குமுளியில் உள்ள கேரளப் பகுதியில் அனைத்து துறையைச் சேர்ந்த சோதனைச் சாவடி ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதே வேளையில் தமிழகப் பகுதியான குமுளி மலைப் பாதையில் வனத்துறை, போலீஸ் சோதனை சாவடி மட்டுமே உள்ளது. மலைப்பாதையில் இருந்த வருவாய்துறை சோதனை சாவடி சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அமைக்க நடவடிக்கை இல்லை.
பெயரளவில் நடக்கும் கூட்டு கூட்டம்: லோயர்கேம்பில் இயங்கி வந்த ஆர்.டி.ஓ., சோதனைச் சாவடி 16 ஆண்டுகளுக்கு முன்பு தேனி பழனிசெட்டிபட்டிக்கு மாற்றப்பட்டது. எல்லைப் பகுதியில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ளதால் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பெர்மிட் பெறுவதில் அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது. மேலும் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி, கஞ்சா கடத்தவதை முழுமையாக தடுக்க முடிவதில்லை. அதனால் எல்லைப் பகுதியான குமுளி லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடத்தலை தடுப்பதற்காக அவ்வப்போது இரு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கம்பத்தில் கூட்டுக் குழு கூட்டம் பெயரளவில் நடத்தி விட்டு செல்கின்றனர். ஆனால் முழுமையான சோதனையை நடத்துவதில்லை.
லோயர்கேம்பில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க 2023ல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் தொடர் நடவடிக்கை இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கடத்தலை முழுமையாக தடுக்க எல்லைப் பகுதியான லோயர்கேம்பில் அனைத்து துறை சார்பில் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் எனமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
வாஜ்பாய் நினைவு தினம்; டில்லியில் ஜனாதிபதி, சிபிஆர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது
-
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி; அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலம்
-
6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
-
11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்!
-
நெரூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு