சேதமடைந்த பேவர் பிளாக் ரோடுகள், புதர் மண்டிய நீர்வரத்து ஓடைகள் சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 16-
ஸ்ரீவில்லிபுத்துாரில் பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் சிதைந்தும், நீர்வரத்து ஓடைகள் புதர்மண்டியும், விஷ பூச்சிகள் நடமாட்டத்தாலும் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நகரின் 33 வார்டுகளிலும் பல்வேறு பஜார் வீதிகள் உட்பட பல்வேறு தெருக்களிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேவர் ப்ளாக் ரோடுகள் அமைக்கப்பட்டது. இதன் வழியாக தினமும் ஏராளமான டூவீலர்கள், ஆட்டோக்கள் மட்டுமின்றி கனரக லோடு வேன்களும், மண் லாரிகள், டிராக்டர்களும் பயணித்து வருகின்றன.
இதனால் பல்வேறு தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் சேதமடைந்தும், சிதைந்தும், பள்ளம் மேடாகவும் காணப்படுகிறது. இதன் வழியாக பயணிக்கும் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தினமும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது போல் நகரின் குடியிருப்பு பகுதிகளை சுற்றி பெரியகுளம், செங்குளம், வடமலைக்குறிச்சி கண்மாய்களின் நீர் வரத்து ஓடைகள் உள்ளது. இவற்றில் பல்வேறு வணிக நிறுவனங்களின் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு நீர்வரத்து ஓடைகள் புதர் மண்டி மண்மேவி அடைபட்டு காணப்படுகிறது.
இதனால் சுகாதாரக் கேடு, விஷ பூச்சிகள் நடமாட்டம், கொசு தொல்லை, மழை நேரங்களில் பாம்புகள் படையெடுப்பு போன்ற சிரமங்களையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தேங்கி கிடக்கும் மணல் குவிகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் தற்போது தார் ரோட்டில் இருந்து மண் ரோட்டிற்கு தள்ளிவிட்டாலும் அந்த மணல் குவியல்கள் அப்புறப்படுத்தததால் டூவீலரில் செல்பவர்கள் சறுக்கிவிழும் நிலை காணப்படுகிறது.
இத்தகைய அடிப்படை குறைகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
* சீரமையுங்கள்
நகரில் பல்வேறு தெருக்களிலும் குறுகிய சந்திகளிலும் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் ரோடுகளின் தடுப்பு சுவர்கள் சிதைந்து, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதன் வழியாக சைக்கிள், டூவீலரில் செல்லும்போது சறுக்கும் அபாயம் காணப்படுகிறது. நடந்து செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் தவறி விழும் நிலை உள்ளது. சேதுமடைந்த பேவர் பிளாக் ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
- சமுத்திர ராஜ், சுய தொழில் முனைவோர்.
* விஷப் பூச்சிகள் நடமாட்டம்
நகரில் ஆண்டுக்காண்டு புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள நீர் வரத்து ஓடைகளில் கழிவுகள் கொட்டப்பட்டும், செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டியும் காணப்படுவதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
வீடுகளுக்கு பாம்புகள் புகுந்து விடுவதால் தீயணைப்புத் துறையினர் தான் வந்து மீட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிகளில் ஒட்டி உள்ள நீர்வரத்து ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.
-ஈஸ்வரன், சமூக ஆர்வலர்
* ஒதுக்கியதை அப்புறப்படுத்துங்கள்
தற்போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தேங்கியுள்ள மணல் குவிகளை சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் நடைபாதைகளில் மணல் குவிந்து டூவீலரில் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலை உள்ளது. எனவே ஒதுக்கப்படும் மணல் குவியல்களை முழு அளவில் அப்புறப்படுத்த வேண்டும்.
- சந்திரபோஸ், ஆட்டோ டிரைவர்.
மேலும்
-
வாஜ்பாய் நினைவு தினம்; டில்லியில் ஜனாதிபதி, சிபிஆர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது
-
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி; அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலம்
-
6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
-
11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்!
-
நெரூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு