சதம் விளாசினார் தேவ்தத் படிக்கல் * முதல் நாளில் இந்திய அணி அபாரம்
காலே: காலே டெஸ்ட் முதல் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 288/2 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் 131 ரன் எடுத்து கைகொடுத்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நேற்று துவங்கியது. இந்திய சுதந்திர தினத்தில் 'டாஸ்' வென்ற இளம் கேப்டன் சுப்மன் கில், பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி இரண்டு 'வேகம்', மூன்று 'சுழல்' என ஐந்து பவுலர்களுடன் களமிறங்கியது. இலங்கை அணியில் கேஷரா நுவந்தா அறிமுக வீரராக இடம் பெற்றார்.
நல்ல துவக்கம்
இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி துவக்கம் கொடுத்தது. ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஜெய்ஸ்வால், லகிரு குமாரா பந்துகளில் பவுண்டரிகளாக விளாசினார். தொடர்ந்து கேஷரா பந்திலும் பவுண்டரி அடித்தார். ஜெய்ஸ்வால் 37 பந்தில் 32 ரன் எடுத்த நிலையில், டெஸ்ட் அரங்கில் 3வது முறையாக ரன் அவுட்டானார்.
சூப்பர் ஜோடி
அடுத்து ராகுலுடன் இணைந்தார் தேவ்தத் படிக்கல். பிரபாத் ஜெயசூர்யா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் தேவ்தத். தொடர்ந்து மீண்டும் வந்த பிரபாத் ஓவரில், மறுபடியும் சிக்சர் அடித்தார் தேவ்தத். உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 101/1 ரன் எடுத்திருந்தது.
மழை தாமதம்
அடுத்து மழை வர, ஒரு மணி நேரம், 20 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. தேவ்தத் அரைசதம் எட்டினார். இவருக்கு நல்ல 'கம்பெனி' கொடுத்த ராகுல், 127 பந்தில் அரைசதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் 21, இலங்கைக்கு எதிராக 4வது அரைசதம் ஆனது. கேஷரா பந்துகளில் ராகுல் அவ்வப்போது பவுண்டரி அடிக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது.
தேநீர் இடைவேளையின் போது, இந்திய அணி 197/1 ரன் எடுத்திருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்த நிலையில், ராகுல் (77) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார்.
தேவ்தத் சதம்
இந்திய அணி 54 ஓவரில் 200/1 ரன்களை எட்டியது. லகிரு குமாராவின் 10 வது ஓவரில் தேவ்தத் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்த அசத்திய இவர், டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதம் (134 பந்து) அடித்தார். அசிதா ஓவரில் சுப்மன் கில் இரண்டு பவுண்டரி விளாசினார். பிரபாத் பந்தில் தேவையற்ற முறையில் 'ஷாட்' அடித்த சுப்மன் (16), இகலமகேவிடம் கேட்ச் கொடுத்தார்.
இந்திய அணி 239/2 ரன் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. 16 நிமிடத்திற்குப் பின் மறுபடியும் போட்டி துவங்கியது. பிரபாத் பந்தில் ரிஷாப் சிக்சர் அடித்தார்.
நேற்று 73 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 288/2 ரன் எடுத்திருந்தது. தேவ்தத் (131), ரிஷாப் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
600 வது டெஸ்ட்
இந்திய அணி நேற்று தனது 600வது டெஸ்டில் களமிறங்கியது. முன்னதாக விளையாடிய 599 டெஸ்டில், 186ல் வென்றது. 224 'டிரா' ஆக, 188ல் தோற்றது. ஒரு டெஸ்ட் 'டை' ஆனது.
* இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது அணி இந்தியா. முதல் இரு இடத்தில் இங்கிலாந்து (1,097), ஆஸ்திரேலியா (883) உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் (596), நியூசிலாந்து (487) அணிகள் 4, 5வதாக உள்ளன.
சுதந்திர தின கொண்டாட்டம்
இந்திய கிரிக்கெட் அணியினர் நேற்று காலேயில் சுதந்திர தினம் கொண்டாடினர். அனைத்து வீரர்களும் அணிவகுத்து நிற்க, பயிற்சியாளர் காம்பிருடன் இணைந்து, கேப்டன் சுப்மன் கில், தேசியக் கொடி ஏற்றினார். பின் தேசிய கீதம் பாடினர்.
கங்குலிக்கு அடுத்து...
இலங்கை மண்ணில் சாய் சுதர்சனுக்குப் பதில் வாய்ப்பு பெற்ற தேவ்தத் படிக்கல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பயிற்சி போட்டியில் 142 ரன் எடுத்தார். நேற்று தனது மூன்றாவது டெஸ்டில் களமிறங்கிய இவர், 131 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
* இதையடுத்து, டெஸ்ட் வரலாற்றில் கங்குலிக்கு (2002ல் 136, எதிர்-ஜிம்பாப்வே) அடுத்து, 3வது இடத்தில் களமிறங்கி சதம் அடித்த இரண்டாவது இந்திய இடது கை பேட்டர் ஆனார் தேவ்தத்.
ஜெய்ஸ்வால் சோகம்
நேற்று போட்டியின் 11வது ஓவரை வீசினார் கேஷரா. கடைசி பந்தை ராகுல் நேராக அடித்தார். எதிர்முனையில் இருந்த ஜெய்ஸ்வால் (32 ரன்), ரன் எடுக்க ஓடினார். அப்போது பந்தை பிடிக்க பாய்ந்த கேஷராவின் வலது கை, ஜெய்ஸ்வால் இடது காலை இடித்து தள்ளியது. இதைப் பார்த்த ராகுல், ரன் எடுக்கும் முடிவை மாற்றி திரும்ப முயன்றார்.
இதற்குள் கீழே விழுந்து எழுந்த ஜெய்ஸ்வால், ரன் எடுக்க ஓட திட்டமிட்டு, பின் முடிவை மாற்றி, கிரீசிற்கு திரும்ப முயன்றார். இதற்குள் ராகுலும் வர, இருவரும் ஒரே பக்கமாக நின்றனர்.
அப்போது, பந்தை பெற்ற விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, 'ரன் அவுட் செய்யவா, வேண்டாமா,' என அருகில் இருந்த கேப்டன் தனஞ்செயாவை கேட்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.
விதிமுறைப் படி இது அவுட் தான் என்றாலும், கேஷரா தள்ளி விட்டதால் தான் ஜெய்ஸ்வால் கீழே விழுந்தார். ஆனால், விளையாட்டு உணர்வுக்கு எதிராக, இலங்கை அணியினர் அவரை ரன் அவுட் செய்தது, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியேறிய ராகுல்
நேற்று 162 பந்தில் 77 ரன் எடுத்திருந்த ராகுல், முழங்கை கை, கால்களில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு, உடல் சோர்வு காரணமாக, 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். 'பிசியோ தெரபிஸ்ட்' உதவியுடன் சிரமத்துடன் நடந்து சென்றார்.
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்