இந்தியா அமர்க்கள ஆரம்பம் * உலக ஹாக்கி தொடரில்...
ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்தியா அமர்க்களமாக துவக்கியது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நேற்று துவங்கியது. இந்திய அணிகள் அணி 'டி' பிரிவில், இங்கிலாந்து, பாகிஸ்தான், வேல்சுடன் இடம் பெற்றுள்ளது. முதலில், 'குரூப் ஸ்டேஜ்' போட்டிகளில் லீக் முறையில் நடக்கின்றன.
இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, வேல்ஸ் அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. போட்டியின் 8வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில், இந்திய வீரர் சஞ்சய், அடித்த பந்து, கோலாக மாறியது.
அடுத்த சிறிது நேரத்தில் இந்திய அணிக்கு மற்றொரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை துல்லியமாக அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (11வது நிமிடம்), கோலாக மாற்றினார். முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
போட்டியின் 43வது நிமிடத்தில் இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில், மறுபடியும் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து அசத்தினார். 56 வது நிமிடம், வேல்ஸ் வீரர் கரேத் பர்லாங், தன் பங்கிற்கு ஒரு 'பீல்டு' கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஹர்மன்பிரீத் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நாளை, இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.
அம்மாவும், மகனும்
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்ற முதல் அம்மா-மகன் என, பிரிதம்-யாஷ்தீப் பெருமை பெற்றனர்.
கடந்த 1998ல் (நெதர்லாந்து) இந்திய பெண்கள் அணியில் பிரிதம் சிவாச் விளையாடினார். தற்போது 28 ஆண்டுக்குப் பின் (2026, நெதர்லாந்து), இவரது மகன் யாஷ்தீப், நேற்று இந்திய ஆண்கள் அணியில், வேல்சிற்கு எதிராக களமிறங்கினார்.
மகிழ்ச்சி
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' தொடரை சிறப்பாக துவக்கியது மகிழ்ச்சி. இளம் வீரர் சஞ்சய், முதல் கோல் அடித்தது கூடுதல் உற்சாகமாக அமைந்தது,'' என்றார்.
இந்தியா-சீனா மோதல்
பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கியில் இந்திய அணி, 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
ஜெர்மனி கலக்கல்
'பி' பிரிவில் நடந்த போட்டியில் ஜெர்மனி, மலேசியா மோதின. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெண்களுக்கான ஹாக்கியில் ஜெர்மனி 3-0 என ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 2-0 என ஜப்பானை வென்றது.
மேலும்
-
பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
-
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம்
-
மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
-
‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு