5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் மூலம், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில், இரண்டு நாட்களுக்கு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரு மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்வதை, நகராட்சி நிர்வாகம் படிப்படியாக குறைத்துக் கொண்டது.

அதாவது, பல வார்டுகளில், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால், தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால், சில குடும்பத்தினர் தனியார் டிராக்டர்கள் மூலம் விற்கப்படும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றனர்.

ஒரு டிராக்டர் தண்ணீரை, 1,000 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு திருத்தணி நகராட்சி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, திருத்தணி நகரில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என, நகராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement