சீரற்ற மின் வினியோகம் நடப்பதால் தொழில் துறை பாதிப்பு: அரசு கவனம் தேவை!

11

சென்னை:'தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் வினியோகம் காரணமாக, தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில், 'டிவி, பிரிஜ், மிக்சி' உட்பட பல வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைந்துள்ளன. சீரான மின்சாரம் வழங்க, அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்' என, தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் குறைவான மின்சாரம் பயன் படுத்துவோருக்கு தாழ்வழுத்தப் பிரிவிலும், அதிக மின்சாரம் பயன்படுத்தும் பெரிய தொழிற்சாலைகளுக்கு உயரழுத்தப் பிரிவிலும் மின் இணைப்புகளை, மின் வாரியம் வழங்குகிறது.


தாழ்வழுத்தப் பிரிவில், வீடுகள், கடைகள், 150 கிலோ வாட் வரை மின் இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

கோடை காலம்



மாநிலம் முழுதும் தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ள மின் தேவை, கோடைக் காலமான ஏப்., மே மாதங்களில், 20,000 மெகாவாட்டை தாண்டுகிறது.

பின், வெயிலின் தாக்கம் குறையும் என்பதால், வீடுகளில், 'ஏசி' பயன்பாடும் குறையும். அதற்கு ஏற்ப, மின் தேவையும் குறையும்; ஆனால், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில், கோடைக் காலம் முடிந்தும், தற்போது வரை வெயில் கடுமையாக உள்ளது.

முதல் முறையாக, இந்த ஆண்டு ஜூலை 14ல் மின் தேவை, 21,724 மெகா வாட்டாக உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது, 20,000 மெகா வாட்டாக உள்ளது.

இதனால், வீடுகளில் மின் பயன்பாடு குறையவில்லை. இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னை, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், பல வீடுகளில் மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை இயக்க, வழக்கத்தை விட அதிக மின்சாரம் தேவைப்படுவதுடன், மோட்டார் பம்ப், 'ஏசி' சாதனங்கள் இயங்குவதில்லை.

மேலும், ஏற்ற, இறக்கமாக மின்சாரம் வருவதால், வீடுகளில் பயன்படுத்தப்படும், 'டிவி, பிரிஜ், மிக்சி' உள்ளிட்ட மின் சாதனங்கள் மற்றும் மின் உபகரணங்கள் பழுதடைகின்றன. இது, தொழிற்சாலைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகார்





இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:


'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன்: திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை அதிகளவில் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

இதனால், தாழ்வழுத்தப் பிரிவில் உள்ள, சிறு, குறுந்தொழில் ஆலைகளில் உற்பத்தி தடைபடுகிறது. மின்சாரம் இல்லை என்றால், ஜெனரேட்டரை பயன்படுத்தி உற்பத்தியை தொடரலாம். ஆனால், மின்னழுத்தப் பிரச்னை நீடிப்பதால், பொருட்களின் உற்பத்தி முடங்கு

இயந்திரங்கள் பழுது



கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ்:


கோவை மாவட்டத்தில், பல இடங்களில் மின்னழுத்த பிரச்னை உள்ளது. மேலும், ஐந்து நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால், முழுவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அதிநவீன இயந்திரங்கள், திடீரென நிறுத்தப்படுவதால், அவை பழுதாகின்றன.

நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு ஆலை உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, மின்சாரத்தை தடையின்றி சீராக வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத் தலைவர் அம்மன் கே.கருணாநிதி:

விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் சீராக மின் வினியோகம் இல்லாமல், அவ்வப்போது எந்த அறிவிப்பும் இன்றி மின்சாரம் நிறுத்தப் படுகிறது.

மேலும், 'லோ வோல்டேஜ்' பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் ஆலைகளில், இயந்திரங்கள் பழுதாகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@ சென்னை நெற்குன்றம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. மின் கம்பிகள் கைக்கு எட்டும் அளவிற்கு தாழ்வாக தொங்குகின்றன. இவற்றை இழுத்து கட்டும் பணியை மின் வாரியம் செய்யாமல் அலட்சியமாக இருப்பதால், பலத்த காற்று வீசினால், திடீர் மின்வெட்டு ஏற்பட்டு, மின் உபகரணங்கள் சேதமாகின்றன.

- எம்.வெங்கடேஷன், 52,

வேன் ஓட்டுநர், நெற்குன்றம், சென்னை


இரவு நேரத்தில் ஏற்படும் குறைந்தழுத்த மின்சாரத்தால், 'இன்வெர்ட்டர்' பழுதாகிறது. மின்விசிறியில் 'கெப்பாசிட்டர்' எனும் மின்தேக்கி அடிக்கடி பழுதாகிறது. அதன் விலை குறைவாக இருந்தாலும், அதை மாற்றுவதற்கு, எலக்ட்ரிஷியனுக்கு 200 ரூபாய் வரை கூலி தர வேண்டியதாகிறது.


-டி.சடகோபன், 65, தலைவர், தமிழக முற்போக்கு நுகர்வோர் மையம், பட்டாபிராம், ஆவடி


ஓ.எம்.ஆரில் சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், காரப்பாக்கம் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், வடிகால், குடிநீர், கழிவுநீர் பணி செய்யும் நபர்கள், மின் கேபிளை துண்டிப்பதாகக் கூறுகின்றனர். இது தவிர சீரற்ற மின் வினியோகமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையால், வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைகின்றன. எனவே, சீரான மின் வினியோகம் வழங்க வேண்டும்.


- என்.சந்திரன், 45, ஐ.டி., ஊழியர், துரைப்பாக்கம்


குரோம்பேட்டை நியூ காலனியில், இரண்டு நாட்களுக்கு முன், மின் கம்பி அறுந்து விழுந்து விட்டது. முறையாக பராமரிக்காதே இதற்கு காரணம். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழைய மின் கம்பிகளை மாற்ற வேண்டும். அதை செய்வதே இல்லை. கிழக்கு குரோம்பேட்டை பகுதியில், குறைந்த மின் அழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது. அங்கு, மின்மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.


- வி.சந்தானம், 88, சமூக ஆர்வலர், குரோம்பேட்டைblock_B

@block_B@ பிரச்னைக்கு தீர்வு என்ன?


மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


துணைமின் நிலையங்களில் இருந்து, மின் வழித்தடங்கள் வாயிலாக டிரான்ஸ்பார்மரில் அனுப்பப்படும் மின்சாரம், 'கேபிள், பில்லர் பாக்ஸ்' உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது. மின் தேவை அதிகம் உள்ள இடங்களில், கூடுதல் டிரான்ஸ்பார்மர் இல்லாததால், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.

மின் சாதனங்களில் ஏற்படும் பழுது மற்றும் பலத்தக் காற்றால், மின் கம்பம் மேல் செல்லும் கம்பிகளில் ஏற்படும் உராய்வு போன்ற காரணங்களால், அதிக மின்னழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வினியோக சாதனங்களில், முறையான பராமரிப்பு பணிகள் செய்யாததால், தற்போது, சீரற்ற மின் வினியோக பிரச்னை காணப்படுகிறது.

இதற்கு தீர்வு காண, துணை மின் நிலையங்களில், 'ஆட்டோ மற்றும் பவர்' டிரான்ஸ்பார்மர்களில் உள்ள, ஓ.எல்.டி.சி., மற்றும் 'ஹால்ப் எல்.டி.சி., சாதனங்களை பயன்படுத்தி, மின்னழுத்தத்தை சரி செய்து, நுகர்வோருக்கு சீராக மின்சாரம் வழங்கலாம். இந்த பணியை உயரதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் பொருத்தப்பட்டுள்ள 'ஆட்டோமேடிக் பவர் பேக்டர் கரெக்ஷன்' கருவிகளை முறையாக பராமரிக்க வேண்டும். இந்த கருவி, டிரான்ஸ்பார்மருக்கு சீரற்ற மின்சாரம் வந்தால், தானாக செயல்பட்டு, மின் இணைப்புகளுக்கு சீராக மின்சாரத்தை அனுப்பும். மின் சாதனங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement