சாலையோரம் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகள் மேய்ச்சலில் ஈடுபடும் மான்களுக்கு சுவாச கோளாறு அபாயம்
கூடலுார்: முதுமலை, சாலையோர வனப்பகுதியில் அதிகரித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு; சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், அதனை ஒட்டிய மசினகுடி வனக் கோட்ட வனப்பகுதியில் பார்த்தீனியம் உட்பட பல்வேறு விஷசெடிகள் அதிகளவில் வளர்கிறது. இவைகள், வனவிலங்கு விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள் வளர இடையூறாக உள்ளன.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, உண்ணி செடிகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், பார்த்தீனியம் உள்ளிட்ட பிற அன்னிய செடிகள் அகற்ற தொடர் நடவடிக்கை இல்லை.
தற்போது, அவ்வப்போது பெய்யும் மழையை தொடர்ந்து, பசுமைக்கு மாறியுள்ள, முதுமலை வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ள பகுதியில் பிற தாவரங்கள் இல்லை.
குறிப்பாக, முதுமலை, தொரப்பள்ளி - கக்கனல்லா இடைப்பட்ட மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தெப்பக்காடு, -மசினகுடி சாலையோரங்களில் வளர்ந்துள்ள பார்த்தீனியம் செடிகளுக்கு இடை ஆயிரக்கணக்கான மான்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதால், அவற்றுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ‘பயனற்ற பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள பகுதிகளில், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும், விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் சுவாசம், ஒவ்வாமை தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பயனற்ற பார்த்தீனியம் செடிகளை வேரோடு அகற்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.