அதிர்ச்சி நாள் தோறும் குற்றங்கள் அதிகரிப்பால் மக்கள் போலீஸ் எண்ணிக்கை அதிகரிக்காத அவலம்
மானாமதுரை,ஆக.18-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்
தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, திருட்டு,வழிப்பறி
சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மானாமதுரை சப்-டிவிஷனுக்குட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, பழையனுார்,திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கொலை,கொள்ளை,திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மானாமதுரை அண்ணாமலை நகரில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பூட்டியிருந்த 2 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.கடந்த 3 நாட்களுக்கு முன்பு மானாமதுரையில் ஒரே நாளில் 4 வீடுகளில் 27 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை அதே கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைக்காட்டூர் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3க்கும் மேற்பட்டவர்களை அரிவாளால் வெட்டியதில் காயமடைந்தனர்.செட்டிகுளம் பகுதியில் பள்ளி சிறுமிகளை ஆபாசமாக பேசி எட்டி உதைத்ததாக இரு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கத்தியால் குத்தியதில் மற்றொரு மாணவர் காயமடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு மானாமதுரையில் இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் விட்டு விழுந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்து மதுரை,சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கொந்தகை கிராமத்தில் உள்ள கண்மாயில் மதுரை மாடக்குளம் அருகே உள்ள தனக்கன்புதுாரை சேர்ந்த கணேசன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதேபோன்று மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் கொலை, கொள்ளை,திருட்டு, ஜாதி ரீதியிலான மோதல், வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மானாமதுரை சப் டிவிஷன் ஸ்டேஷன்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், குற்றப்பிரிவு முடங்கி கிடப்பதாலும், குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக ஆங்காங்கே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து கிடப்பதாலும் தினந்தோறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மடப்புரம் பகுதியில் கோயில் காவலாளி அஜித்குமார், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் ஆகியோர் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், தற்போது போலீசார் குற்றவாளிகளை கண்டும் காணாமலும் போவதால் குற்றவாளிகள் அத்துமீறி தினந்தோறும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பகுதியில் குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பது தான் போலீசாரின் முக்கிய பணி. ஆனால் மானாமதுரையில் இது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு போலீசார் குற்றவாளிகளை விருந்தாளிகளை போல நடத்தி வருவதால் அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில் போலீசார் மேலும் கண்டும் காணாமல் இருப்பதால் தற்போது குற்றவாளிகள் எவ்வித போலீஸ் பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சட்டம்,ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களின் அச்சத்தை போக்கவும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும்,குற்றப்பிரிவை வலுப்படுத்தி இரவு நேர
ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்,