கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் இறந்த மீன்கள் தொடரும் அதிர்ச்சி!: ஆலை ரசாயன கழிவுகளே காரணம் என குற்றச்சாட்டு; வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் சாலை மறியல்
எண்ணுார்: எண்ணுார் கொசஸ்தலை ஆற்றில் நேற்று, டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, எண்ணுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் மீன்கள் இறப்பது தொடர்கதையாக இருப்பதாக, அவர்கள் குற்றம்சாட்டினர்.
வடசென்னையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
இவற்றில் தேங்கும் கழிவுகளை, அத்துமீறி அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றுவதால், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, மீனவர் இடையே கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், கொசஸ்தலை ஆறு - எண்ணுார் முகத்துவாரம் இடையேயான கழிமுக பகுதியில், நேற்று காலை, மடுவை, காரப்பொடி உள்ளிட்ட மீன் வகைகள், டன் கணக்கில் செத்து மிதந்தன.
கழிமுக பகுதி மட்டுமின்றி, கொசஸ்தலை ஆறு, புழல் உபரி கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களிலும், ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன.
அழுகிய நிலையில், கடும் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறி, எண்ணுார் - தாழங்குப்பம் சந்திப்பு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
தகவலறிந்து அங்கு வந்த திருவொற்றியூர் த.வெ.க., -- எம்.எல்.ஏ., செந்தில்குமார், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், மீனவர்களிடம் பேச்சு நடத்தினர்.
ஆனாலும் மீனவர்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில மணி நேர பேச்சுக்கு பின் சமாதானம் அடைந்த மீனவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமை பொறியாளர் சேவியர் தலைமையிலான ஆய்வு குழுவினர், கொசஸ்தலை ஆற்றின் நீர் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது, நீரின் பி.எச்., மதிப்பு மற்றும் நச்சுத்தன்மை கலப்பு ஆகிய இரு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டிலும், நீரில் எவ்வித பாதிப்பும் இல்லை என, அதிகாரிகள் கூறினர். ஆனால், மீன்கள் எதனால் இறந்தன என்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை.
மீனவர்கள் கூறியதாவது:
கொசஸ்தலை ஆறு, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், எண்ணுார் முகத்துவாரம் வழியே கடலில் கலக்கிறது.
முகத்துவாரத்தை நம்பி எண்ணுாரின் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவார குப்பம், எண்ணுார் குப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராமங்களைச் சேர்ந்தோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
எங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பகிங்ஹாம் கால்வாயில், சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் நீர் மஞ்சள் நிறமாக மாறுவதும், மீன்கள் செத்து மிதப்பதும் நடக்கும் நிலையே உள்ளது.
தவிர, வல்லுார் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுடுநீரால், மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம், திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுகளால் தான், டன் கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதற்கு காரணமானோர் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன்கள் இறப்பால், தொழில் செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே, மாற்று வேலை வாய்ப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@quote@ இழப்பீடு தேவை எண்ணுார் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரங்களில் முதன்மையானது, கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிப்பது. இந்நிலையில், டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால், அடுத்த சில வாரங்களுக்கு, அந்த பகுதியில் மீன் பிடிப்பது சாத்தியமில்லை. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்த விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத் தொகை வசூலித்து, மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி, அப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
- அன்புமணி, பா.ம.க., தலைவர்quote
@quote@ வாழ்வாதாரம் பாதிப்பு
கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகளால், அவ்வப்போது தண்ணீர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ஆனால் நேற்று, தண்ணீர் நிறம் எதுவும் மாறவில்லை. ஆனால் எவ்வித அறிகுறியும் இன்றி, மீன்கள், நண்டுகள், இறால்கள் ஆகியவை செத்து மிதந்தன. ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில், மீன்கள் இறந்து பார்த்ததில்லை. இதனால், எண்ணுார் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
- எஸ்.விசாந்த், 39, மீனவர், நெட்டுக்குப்பம், எண்ணுார்.quote
@block_B@ இறந்த மீன்களை பரிசோதனை செய்ய வேண்டும்
கொசஸ்தலையில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து, கடல் அறிவியல் நிபுணர் டாக்டர் எஸ்.வி.சந்திரசேகரன் கூறியதாவது: கனமழை பெய்யும்போது, நிலத்தின் ஏராளமான ஊட்டச்சத்துகள் மழைநீருடன் அடித்து செல்லப்பட்டு, ஆறுகளில் கலந்து இறுதியாக கடலில் கலக்கிறது. சில நேரங்களில், 'டயட்டம்கள் - டைனோபிளாஜெல்லேட்ஜ்' போன்ற நுண்ணிய பாசிகள், திடீரென அதிக அளவில் பெருகலாம். இதனால், நீரில் ஆக்சிஜன் அளவு குறைவதாலும், பாசிகள் வெளியிடும் நச்சாலும், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறக்கக்கூடும். தவிர, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய வேதி பொருட்களாலும், இதுபோல் நடக்கக்கூடும். இறந்த மீன்களில் மரண பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே, அவை உயிரிழந்ததற்கான காரணத்தை அறியமுடியும். இவ்வாறு, இறந்து மிதக்கும் மீன்களை உணவாக எடுத்துக்கொள்ள கூடாது. கருவாடாக தயாரிக்கவும் பயன்படுத்தக் கூடாது. மாறாக, ஆழமான குழிகள் தோண்டி புதைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.block_B
வேதனைமேலும்
-
பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
-
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம்
-
மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
-
‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு