காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் காணிக்கை நகையை அணிந்த பூஜாரி சஸ்பெண்ட்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலில், பக்தர் காணிக்கையாக வழங்கிய ஐம்பொன் நகையை அணிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய பூஜாரி செந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த தாமோதரன், மே மாதம் ரூ.26 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் நகையை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த நகையில் சொரிமுத்து அய்யனார், பூரண புஷ்கலா அம்பிகை உருவம் கொண்ட பதக்கம் இடம்பெற்றிருந்தது.

கோயிலில் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த நகையில் லேசான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து நகையை சரிசெய்வதற்காக பூஜாரி பிச்சையா, மற்றொரு பூஜாரியான செந்திலிடம் ஒப்படைத்தார்.

ஆக., 11ல் நடந்த ஆடி அமாவாசை திருவிழாவின்போது, காணிக்கை நகையை பூஜாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்தபடி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

தான் காணிக்கையாக வழங்கிய நகையை பூஜாரி அணிந்திருப்பதை பார்த்த தாமோதரன், சமூக வலைதளம் வாயிலாக புகார் அளித்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர் இளங்குமரன் விசாரணை நடத்தினார். இதில், காணிக்கை நகையை பூஜாரி செந்தில் அணிந்தபடி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின்பேரில் பூஜாரி செந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும், பக்தரிடம் இருந்து நகையை பெற்றுக் கொண்டு, கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், சேதமடைந்ததாக கூறி அதை சரிசெய்வதற்காக செந்திலிடம் ஒப்படைத்தது தொடர்பாக பூஜாரி பிச்சையாவிடமும் விசாரணை நடக்கிறது.

Advertisement