'வாடிக்கையாளர்கள் பாராட்டுவதே பெரிய அங்கீகாரம்!'
'டிஜிட்டல் டிசைனிங்' தொழிலில் அசத்தும், திருச்சியைச் சேர்ந்த இலக்கியா:
சிறு வயதில் பெரிய லட்சியம் எதுவும் இல்லை; படிப்பிலும், அவ்வளவாக ஆர்வமில்லை. நான் பிளஸ் 2 முடித்தபோது, பொறியியல் படிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. அதில், பெண்கள் குறைவாக இருக்கும் துறையான, 'சிவில் இன்ஜினியரிங்' தேர்ந்தெடுத்தேன்.
கல்லுாரி வாழ்க்கை எளிதாக அமையவில்லை; படிப்பில் ஆர்வமின்மை, தேர்வுகளில் தோல்வி, பொருளாதார சிக்கல்கள் என பல தடைகள் இருந்தன. கல்லுாரி கட்டணத்தை கூட சரியான நேரத்தில் செலுத்த முடியாத சூழலில், எப்போதும் ஒரு குற்ற உணர்ச்சி உள்ளுக்குள் இருந்தது.
ஒருவழியாக படிப்பை முடித்தபோது, குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. எப்படியாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை. ஆனால், நான் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பல முயற்சிகளுக்கு பின், ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன்; ஆனாலும், பெரிய முன்னேற்றம் இல்லை.
அப்போது, பொழுதுபோக்கிற்காக வீட்டிலேயே கணினியில் வடிவமைப்பு குறித்து கற்றுக் கொண்டிருந்தேன். அதையே முறைப்படி கற்றுக் கொண்டேன். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது; ஆனால், கையில் பணம் இல்லை.
என் நகைகளை அடகு வைத்து ஒரு கம்ப்யூட்டர் வாங்கி, வீட்டில் இருந்தபடியே டிசைனிங் வேலைகளை செய்து கொடுத்து வந்தேன்; வரவேற்பு நன்றாக இருந்தது. அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என்ற நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்து விட்டது.
ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின், 'துாரிகை கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். என் மீது நம்பிக்கை வைத்த சில நல்ல மனிதர்கள் கடன் உதவி செய்தனர். அவர்கள் கொடுத்த பணத்தை சொன்னபடியே திருப்பிச் செலுத்தி, நம்பிக்கையை காப்பாற்றினேன்.
என் வெற்றி பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர், என் அம்மா தான். ஆரம்பத்தில் சாதாரண டிசைனிங் செய்து கொடுத்து வந்தேன். காலப்போக்கில் திருமண அழைப்பிதழ்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.
பொருளாதார ரீதியாக முன்னேறிய பின், பழைய கடையை அழைப்பிதழ்களுக்கான கடையாகவும், எதிரே கிடைத்த இன்னொரு பெரிய கடையை அலுவலகமாகவும் மாற்றினேன். தற்போது அழைப்பிதழ்கள், பிளக்ஸ் போர்டுகள், பெயர் பலகைகள், விசிட்டிங் கார்டுகள், 'லோகோ டிசைனிங்' உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேவைகளை செய்து வருகிறேன்.
நான் செய்து கொடுத்த டிசைன்கள் குறித்து, நான்கைந்து ஆண்டுகளுக்கு பின்னும், வாடிக்கையாளர்கள் பாராட்டுவதே, எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம்.
***