காலே டெஸ்ட்டில் இந்தியா 462 ரன் குவிப்பு; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை


காலே: காலே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன் குவித்துள்ளது. தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 59 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, காலேவில் ஆகஸ்ட் 15ம் தேதி துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு, சிறப்பான துவக்கத்தை கொடுத்த ஜெய்ஸ்வால் 32 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். அதன்பிறகு, கில் (16), பன்ட் (39) ஆகியோர் ஏமாற்றம் அளித்தாலும், நிதானமான ஆடிய படிக்கல் (167), தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 82 ரன்னிலும், துருவ் ஜூரேல் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன் குவித்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டம் துவங்கியதும் பிரசித் கிருஷ்ணா 2 ரன்னில் அவுட்டானார். இதனால், இந்திய அணி 462 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் பிரபத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், நுவாந்தா 3 விக்கெட்டும், பெர்னான்டோ 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணிக்கு, ஆட்டத்தின் 2வது பந்திலேயே சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். அவர் நிஷான் பெர்னான்டோவை ரன் ஏதுமின்றி டக் அவுட்டாக்கினார். அடுத்து சண்டிமல் (4), உதாரா (27) ஆகியோர் மனவ் சுதார் பந்தில் நடையைக் கட்டினர். கமிந்து மென்டிஸ் (14) குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். இதனால், இலங்கை அணி 59 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Advertisement