பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீசார்
திருவள்ளூர், ஆக. 18–
கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றவரை தடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்த சம்பவம், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் வட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43. இவருக்கு சொந்தமான, 31 சென்ட் நிலத்தை, யு.டி.ஆரில் அனாதை நிலமாக வருவாய் துறையினர் மாற்றியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, தனக்குச் சொந்தமான நிலம் எனக்கூறி, திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில், பல முறை மனு அளித்துள்ளார்.
ஆனால், வருவாய் துறையினர், அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மேலும், சில நாட்களுக்கு முன், அந்த இடத்தை வருவாய் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஏழுமலை, நேற்று காலை, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு, பெட்ரோல் கேனுடன் வந்தார்.
போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், திடீரென ஏழுமலை, தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டார்.
அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மொபைல் போனில் பேசியபடி, ஏழுமலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட பொதுமக்கள், ஏழுமலையை தடுத்து, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். அதன் பின் வந்த போலீசார், அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்