பெண்களிடம் அத்துமீறல் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: போதை ஆசாமி கைது

வியாசர்பாடி: பெண்களிடம் அத்துமீறியதை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பிரமுகரை வெட்டிய, போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

வியாசர்பாடி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் மகேஷ், 36. இவர், 45வது வார்டு அ.தி.மு.க., துணைச் செயலராக உள்ளார்.

வீட்டின் அருகே உள்ள ரேணுகா பரேமஸ்வரி அம்மன் கோவிலின் துணை தலைவராகவும் உள்ளார். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சுவாமி ஊர்வலம் நடந்தது.

அங்கு வந்த பெண்களிடம், போதையில் இருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன், 28 என்பவர், அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மகேஷ் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் வைத்திருந்த கத்தியால் மகேஷின் கழுத்தில் வெட்டி தப்பினார். காயமடைந்த மகேஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement