கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்; நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக எம்எல்ஏ.,க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்தை பதிவிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுகையில், ''கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டதில் சதி நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்'' என்றார். கர்நாடக வனத்துறை மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என சிபிஐ எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல; விசாரணை தேவை என முதல்வர் விஜய் கூறியுள்ளார்; யார் முதலில் சுட்டது? வன்முறையை பயன்படுத்தியது நியாயம்தானா? என்பது குறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும், என்றார்.
உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் என நிர்மல்குமார் தெரிவித்தார். தமிழ் உணர்வு குறித்த அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்.
கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் தொடர்பில்லாத கருத்துகளை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தது அவை குறிப்பில் இருந்து நீக்கியதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
மேலும் சபாநாயகர் கூறுகையில், ''கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி தான் அனைவரும் பேச வேண்டும்; யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை; கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான அமைச்சரின் பதில் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும்.
கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம்; ஆனால் வேறு பொருள் குறித்த கருத்துகளைத் தெரிவிக்க அனுமதியில்லை'', என்றார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement