நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
காஞ்சிபுரம்: 'நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நேற்று உத்திரவிட்டார்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 466 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர் கூட்டத்தில், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான குறைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளும் இடம் பெற்றிருந்தன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தகுதியான கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சினேகா அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள், மக்கள் தொடர்பு முகாம், ஜமாபந்தி, முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெறப்பட்ட மனுக்களின் நிலுவை விபரங்கள் குறித்து துறை வாரியாக கலெக்டர் ஆய்வு செய்தார்.
குறிப்பாக, நில அளவைப் பிரிவில் வட்டம் வாரியாக நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். 15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி, ஒரு மாதத்திற்குள் கட்டாயம் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆறு மாதம், ஒரு ஆண்டு என நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனுக்களையும் அடுத்த கூட்டத்திற்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்கப்படாத மனுக்களை அடுத்த கூட்டத்தில் நேரடியாக கொண்டு வந்து, அவை ஏன் நிலுவையில் உள்ளன என்பதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதில்கள் முறையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். மீண்டும் அதே பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் குறை தெரிவிக்காத வகையில், மனுக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சினேகா உத்தரவிட்டு உள்ளார்.