இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு

3


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் இந்தியாவின் தேர்தல் முறையை குறிப்பிட்டு, அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார்; செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்?

இந்தியாவில் நடந்த கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் ஓட்டளித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும்; இதனால் நாம் Save America Act இப்போதே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


என்ன சட்டம்?





* அமெரிக்க தேர்தல்களில் ஓட்டளிக்க பதிவுசெய்யும் நபர்கள், செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன், அமெரிக்கக் குடியுரிமைக்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.

* இந்தச் சட்டம், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் ஆகியவற்றுக்கு விதிவிலக்குகளுடன், தபால் மூலமான ஓட்டளிப்பதை கட்டுப்படுத்தவும் முயல்கிறது. குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு இது கட்டாயப்படுத்தும்.

* கூட்டாட்சித் தேர்தல்களில் அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று வாதிட்டு, வெள்ளை மாளிகை இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ளது. தேர்தல் மோசடியை தடுக்க இந்தச் சட்டம் தேவை என டிரம்ப் பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement