இரண்டாவது சுற்றில் லக்சயா சென் * உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...

புதுடில்லி: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.
டில்லியில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 30வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியாவில் இரண்டாவது முறையாக (2009, 2026) இத்தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென், ஆஸ்திரியாவின் கோலின்ஸ் பிலிமானை எதிர்கொண்டார்.
முதல் செட்டை லக்சயா 16-21 என நழுவவிட்டார். பின் சுதாரித்த இவர், அடுத்த இரு செட்டுகளை 21-8, 21-4 என வசப்படுத்தினார். 45 நிமிட போட்டி முடிவில் லக்சயா 16-21, 21-8, 21-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
உன்னதி வெற்றி
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி, மியான்மரின் தெட் துஜாரை சந்தித்தார். முதல் செட்டை 22-20 என போராடி வென்றார் உன்னதி. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் முந்திய இவர், 21-16 என கைப்பற்றினார். 40 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 22-20, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
* பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, அமெரிக்காவின் அல்லிசன், லாரென் ஜோடியை சந்தித்தது. 39 நிமிடம் நடந்த இப்போட்டியில் இந்திய ஜோடி 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
* கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி, ரோஹன் ஜோடி, கனடாவின் கிறிஸ்டல், ஜோனாதன் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 22-20, 19-21, 17-21 என போராடி தோற்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆஷித், அம்ருதா ஜோடி 21-16, 29-30, 22-24 என துருக்கியின் எம்ரே, பெக்டாஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement